ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ‘பெனடிக்ட் ஜக்கோபிள்ளை’ யை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்பட்ட நானாட்டான் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான பெனடிக்ட் யாக்கோப்பிள்ளையை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட தலைவருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..,
மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் பாதீடு நேற்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற போது கட்சியின் முடிவுக்கு மாறாக குறித்த உறுப்பினர் செயல்பட்டு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களித்துள்ளார்.
இந்த நிலையில் கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் யாக்கோப் பிள்ளையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இதே வேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரின் கோரிக்கைக்கு அமைவாகவே நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் போது, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் பெனடிக்ட் ஜக்கோபிள்ளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.