இ.போ.சபை தலைமை காரியாலயத்திற்கு தகுதியற்றவர்களை நியமிக்க நடவடிக்கை..?

இலங்கை போக்குவரத்து சபை தலைமை காரியாலயத்தில் தகுதியற்றவர்களை உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை தலைமை காரியாலயத்தில் பயிற்சி முகாமையாளரின் கோரிக்கைக்கு அமைவாக நாளைய தினம் வியாழக்கிழமை (16) தலைமை காரியாலயத்தில் பொது ஜன பெறமுன தொழிற் சங்கத்தில் அங்கம் வகிக்கும் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் உத்தியோகத்தர்களாக பதவி உயர்வு பெற்றுக் கொள்ள கணினி பயிற்சி பாடநெறி நடை பெறவுள்ளது.

எனினும் எந்தவொரு கல்வித்தகைமை மற்றும் தொழில் அனுபவம் இல்லாத பலருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட உள்ள நிலையில், அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பதவி உயர்வில் பட்டதாரிகள் எவரும் உள் வழங்கப்படவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த கணினி பயிற்சிக்கு வெளிப்படையாக விண்ணப்பம் கோரவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த கால நல்லாட்சி அரசின் காலத்தில் 2018 ஆம் ஆண்டு இலங்கை அரச போக்குவரத்து சபையில் வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இவ்வாறான பதவி உயர்வுகள் எப்படி வழங்க முடியும் எனவும், அலுவலகத்தில் கடமை செய்கின்ற உத்தியோகத்தர்களுக்கு முழுமையாக இந்த கணனி பயிற்சி உள்ள நிலையில் சாரதிகள் காப்பாளர்களுக்கு எப்படி வழங்க முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனால் வடமாகாணத்தில் மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு உள்ளடங்களாக அனைத்து சாலைகளிலும் பல வருடங்களாக பணியாற்றியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *