கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டேன். மாவை சேனாதிராசாவின் தேர்தல் பிரச்சார பிரசுரங்கள் என்னிடம் தரப்பட்டது. அதை விநியோகிப்பது பற்றி சிறிதரன் எம்.பியிடம் கேட்டபோது, அதனை குப்பையில் போடுமாறு கூறினார். மாவை, சிறிதரன், சுமந்திரனிற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டேன். தன்னை தவிர இன்னும் இருவருக்கும் வாக்களிக்க கோரியதாலேயே சிறிதரன் என்னை பழிவாங்குகிறார் என பூநகரி பிரதேசசபை தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள பூநகரி பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் நேற்று இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
பூநகரி பிரதேசசபை தவிசாளருக்கும், மாவட்டத்தின் எம்.பி சிறிதரனிற்கும் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐயம்பிள்ளையை தவிசாளர் பதவியிலிருந்து விலகும்படி சிறிதரன் கேட்க, அவர் மறுத்து விட்டார்.
இதையடுத்து, பிரதேசசபை உறுப்பினர்கள் மூலம் தவிசாளருக்கு நெருக்கடி கொடுத்து வந்தார் சிறிதரன். இதனால் பூநகரி பிரதேசசபையின் செயற்பாடு முடங்கியது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி மோதலாலேயே ஒரு பிரதேச நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டது.
நேற்று வரவு – செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஊடகங்களிடம் பேசிய தவிசாளர் அ.ஐயம்பிள்ளை தெரிவிக்கையில்,
‘கடந்த காலங்களில் தமிழத் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு கடுமையாக பாடுபட்டேன். இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் துண்டு பிரசுரங்கள் எனக்கு கொடுக்கப்பட்டது. அதனை விநியோகிப்பது தொடர்பில் சிறிதரன் எம்பியிடம் கேட்டேன். அதனை குப்பையில் போடுமாறு கூறினார்.
அந்த தேர்தலில் மூன்று விருப்பு வாக்குகளில் சிறிதரன் எம்பிக்கு ஒன்றையும், மாவை மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு ஏனைய இரண்டையும் வழங்குமாறு நான் பிரச்சாரம் செய்தேன். அதன் பிரதிபலிப்பே என்னை இன்று தோற்கடித்துள்ளது.
பல்வேறு வகையில் என்னை தூற்றினார்கள். இவை அத்தனையையும் நான் கேட்டு சலித்துப் போனேன்.
எதிர்காலத்தில் வேறு கட்சிகளுடன் இணையவுள்ளதாக வெளியான செய்திகளையும் மறுத்தார். ‘நான் ஒதுங்கிக்கொள்ளப் போகின்றேன் என அவர் தெரிவித்தார்.