அருட்தந்தை ஜோன் ஹேர்பட்டின் திருவுருவச்சிலை மட்டக்களப்பில் திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காக குரல்கொடுத்த நிலையில்  காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட் அவர்களின் திருவுருவச்சிலை  மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

ஊரணி சந்தியில் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் இந்த சிலை  இன்று (வியாழக்கிழமை) காலை திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை ஜேசுசபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சிலையின் திறப்பு விழாவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்த திறப்பு விழாவில் இலங்கை ஜேசுசபையின் தலைவர் உட்பட அருட்தந்தையர்கள்,ஜேசுசபை துறவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

1948ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து மட்டக்களப்பு வருகைதந்த அவர் புனித மைக்கேல் கல்லூரி ஆசிரியராகவும் தொழிநுட்ப பயிற்சி கல்லூரியின் ஸ்தாபகராகவும் செயற்படடதுடன் மட்டக்களப்பின் விளையாட்டுத்துறைக்கும் அரும்பங்காற்றியுள்ளார்.

அத்துடன் 1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள், படுகொலைகள்,இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக குரல்கொடுத்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஏறாவூர் பகுதி ஊடாக பயணித்துக்கொண்டிருந்தபோது அருட்தந்தை அவர்கள் காணாமல்போயிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *