சுகாதார துறையினை சேர்ந்தவர்கள் மட்டக்களப்பில் பாரிய கவனஈர்ப்பு போராட்டம்!

கிழக்கு மாகாண சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் சுகாதார துறையினை சேர்ந்தவர்கள் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பில் பாரிய கவன ஈர்ப்பு போராட்டமொன்றும் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து 16 சுகாதார தொழிற்சங்கள் இணைந்த கிழக்கு மாகாண சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார துறையினை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியானது மட்டக்களப்பு நகர் ஊடாக ஊர்வலமாக சென்று மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் வரையில் சென்று அங்கிருந்து காந்திபூங்கா வரையில் பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களச் சேர்ந்த சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் பெருமளவானோர் இந்த பேரணியில் கலந்துகொண்டதுடன் தேசிய சுகாதார சங்கங்களின் தலைவர்களும் இந்த கவன ஈர்;ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் சேவைக்குரிய உரிமைகளை தந்துவிடு,றனுக்கின் சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து,சுகாதார நிர்வாக சேவையினை ஆரம்பி போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் கவன ஈர்ப்பு பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

போராட்டம் காரணமாக மட்டக்களப்பு நகருக்குள் வாகன நெரிசல்கள் ஏற்பட்டதையும் காணமுடிந்ததுடன் சுகவீன விடுமுறைப்போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் சேவைகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *