13 வது திருத்தம் எமது தமிழர்களை ஒருபோதும் பாதுகாக்காது! அனந்தி

ஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13வது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் ஸ்தாபகர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று (16) விஐயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கிட்டிய தூரத்தில் இந்தியா இருக்கும் நிலையில் சீனாவின் பார்வை யாழை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது.

இரண்டு நாடுகளும் முரண்படுகின்ற போது அது வடக்கு மக்களையே பாதிக்கும் ஒரு நிலைவரும். அந்த நேரத்தில் எமது மக்களே அழிவிற்கு உட்படும் நிலையில் இருப்பார்கள்.

நாம் இறைமையுள்ள ஒரு இனம். எமது வளங்கள் சுரண்டப்படுவதற்கான அத்திவாரம் இடப்படுவதை நாம் பார்க்கலாம். எமது வளங்களும் அபிவிருத்திகளும் எமது மக்களையே சென்றடைய வேண்டும். வெறுமனே இந்த நாடுகள் சுரண்டி செல்வதற்கு அனுமதிக்க கூடாது. எனவே எமது மக்களும் அரசியல் பிரதிநிதிளும் இந்த விடயத்தில் விழிப்புணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாக சிவாஜிலிங்கம் தலைமையில் பல கூட்டங்கள் அன்று இடம்பெற்றது.

இவ்வாறான கூட்டுக்கள் தேவையில்லை என்று பாராளுமன்ற உறுப்பின ர்செல்வம் அடைக்கலநாதன் அன்று தெரிவித்திருந்தார். அன்று சிவாஜிலிங்கம் தலைமையில் பத்து கட்சிகளின் கூட்டு தேவையில்லை என்று பேசிய ரெலோ தற்போது தன்னுடைய தலைமையில் கூட்டமைப்பிற்குள் இருக்கும் தமிழரசுக்கட்சியையே தனக்குள் கொண்டுவர முடியாமல் ஒரு கூட்டினை அமைத்திருக்கின்றார்கள். அத்துடன் 13 வது திருத்தத்தை ஆரம்ப புள்ளி என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

உண்மையில் தமிழ்மக்கள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தொடர்ந்து சந்தித்து கொண்டிருக்கும் இந்நிலையில் 13 வது திருத்தச்சட்டமூலம் தீர்விற்கான ஆரம்ப புள்ளியாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

அதேபோல சுமந்திரனின் தமிழரசுகட்சி அமெரிக்கா சென்றிருக்கின்றது. அங்கு என்ன பேசினார்களோ தெரியவில்லை. அவர்கள் பேசி இரண்டுநாள் கழித்து வெளியுறவு இராஜாங்க அமைச்சர் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தீர்வை நாம்கோருவோம் என்ற கருத்தை பதிவுசெய்துள்ளார். ஆனால் அவர் இங்கு சமஸ்டியை பற்றி பேசுகின்றார்.

ஆகவே 13ற்குள் எம்மை முடக்குவதற்கு இரு பகுதிகளுமே முனைப்புடன் செயற்படுவதை பார்கின்றோம். எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் சொல்ல வேண்டும். ஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13 வது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது.

ஐந்து வருடங்களாக மாகாண சபையில் இருந்து அதன் அதிகாரத்தை நாம் நன்கு நிரூபித்தோம். இந்த மாகாணசபையில் இருந்து ஒன்றையும் செய்ய முடியவில்லை என்று கூறிய விக்கினேஸ்வரன் ஐயாவும் இந்த வட்டத்திற்குள் நிற்பது அக முரண்பாட்டையே ஏற்படுத்தி நிற்கின்றது. எனவே ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் அதி உட்சபட்ச சுயாட்சி அதிகாரத்தை கோரிநிற்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *