மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து ஆட்சி நடத்தும் மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பிரதேச சபையின் உப தவிசாளரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் சபையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது ஏற்பட்ட மோதலில் பிரதேச சபையின் உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் எஸ்.ஏ.திஸாநாயக்க ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இந்தநிலையில், மஸ்கெலிய பொலிஸாரால் மஸ்கெலியா பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் எஸ்.ஏ.திஸாநாயக்க, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் பெருமாள் ஆனந்தராஜ் ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதலில் காயமடைந்த மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன் தொடர்ந்தும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.