இந்தியா இங்கிருந்து எவ்வளவு தூரம்? சீன தூதுவர் எழுப்பிய சர்ச்சைக்குரிய கேள்வி!

வடமாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி செங்ஹொங் ( Qi Zhenhong) தலைமையிலான குழு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் மற்றும் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளது.

வடக்கு மீன்பிடி துறையை ஊக்குவிக்கும் வகையிலான பல சந்திப்புகளை வடக்கில் முன்னெடுத்திருந்த சீன தூதுரகக் குழு நல்லூர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுப்பட்டது. அதே போன்று பல உதவித் திட்டங்களையும் முன்னெடுத்திருந்தது.

இந்த விஜயத்தில் சீன தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் மற்றும் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டிருந்தனர். பருத்தித்துறைக்கு சென்ற சீன தூதுவர் எந்தளவு தொலைவில் இந்தியா உள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அங்கிருந்த இராணுவ அதிகாரி, 30 கிலோ மீற்றர் என குறிப்பிட்டார். இதன் பின்னர் ட்ரோன் ஒளிப்பதிவு கருவி பறக்க விடப்பட்டதாக அங்கிருந்த செய்தியாளர் குறிப்பிட்டார்.

Advertisement

இந்த விடயம் தொடர்பில் பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. இவ்வாறானதொரு கேள்வியை வெளிப்படையாகவே சீன தூதுவர் ஏன் எழுப்பினார் என்பது சர்ச்சைக்குறிய விடயமே. சீன இராஜதந்திரத்தின் கூர்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் செய்தியாகவா இது உள்ளது? என்றும் கருத தோன்றுகின்றது.

ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையில் சுமூகமான இராஜதந்திர உறவுகள் இருப்பதாக வெளிப்புறத்தில் காண்பித்தாலும் உண்மையில் அது அவ்வாறு இல்லை என்பதே யதார்த்தமான உண்மை. சீனா யாழ். தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த மின்திட்டத்தை இரத்து செய்த பின் இடம்பெற்ற விஜயம் என்பதால் இதன் முக்கியத்துவம் குறித்து உணரப்பட்டது. வடக்கின் முக்கிய தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலை தீவு என்பவற்றில் சீனா சூரிய மின்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது.

ஆனால் மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு குறித்த கரிசனை காரணமாக திட்டத்தை மாலைத்தீவுக்கு மாற்றுவதாக சீன தூதரகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய விஜயத்தில் ஈடுப்பட்டிருந்தபோது அறிவிக்கப்பட்டிருந்தமை முக்கியமாகின்றது. இதனை இலங்கையில் சீனா அடைந்த இராஜதந்திர பின்னடைவாகவும் கூறப்பட்டது.

அவ்வாறானதொரு பின்னடைவாக இருக்குமாயின் நிச்சயமாக வடக்கில் கரையோர பகுதிகளிலும் மன்னார் மற்றும் திருகோணமலை போன்ற முக்கிய இடங்களிலும் சீனா புதிய திட்டங்களை முன்னெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்புகள் கற்கை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஹசித கந்த உடஹேவா தெரிவித்திருந்தார்.

அதேபோன்று வடக்கு தீவுகளில் திட்டமிட்டிருந்த மின் திட்டத்தை மாலைத்தீவுக்கு மாற்றியமையின் ஊடாக இந்த பிராந்தியத்தில் இலங்கை எம்முடன் இல்லாதபோதிலும் வேறு நாடுகள் உள்ளது என்பதை சீனா வெளிப்படுத்துவதாகவே அமைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையானது இலங்கையை மையப்படுத்திய இந்திய – சீனா பணிப்போரின் பிரதிப்பளிப்புகளாகவே இவை அமைகின்றன. இந்திய எல்லைக்கு அண்மித்த பகுதியில் சீனாவின் செயற்பாடுகளை அனுமதித்து விடக்கூடாது என்பதில் டெல்லி எப்போதும் விட்டுக்கொடுத்து செயற்பட்டதில்லை. லடாக் உள்ளிட்ட இமாலய பகுதிகளில் இந்திய – சீன எல்லை பிரச்சினைகள் தீவிர போக்கிலேயே உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *