அரசாங்கத்தின் தவறுகளை மூடிமறைக்க நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கவில்லை! விளையாட்டுத்துறை அமைச்சர் கூறுகிறார்

அரசாங்கத்தின் தவறுகளை மூடிமறைக்க நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாட்டின் உண்மையான நிலைமைகளை மக்களிடத்தில் எடுத்துக்கூறி ஒளிவுமறைவு இல்லாது ஆட்சியைக்கொண்டு செல்கின்றோம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு ஹொக்கிசம் மேளனத்தின் புதிய மைதான புனரமைப்பு நிகழ்வில் கலந்து கொண்டவேளையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் தவறுகளை மறைக்க நாடாளுமன்றத்தை ஒத்திவைத்ததாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். உண்மையில் அவ்வாறான அனுபவம் அவர்களுக்கே உள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் கோப் குழு அறிக்கை நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவிருந்த நிலையில் அப்போதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தனர்.

ஆனால் இப்போது அவ்வாறான நோக்கத்தில் ஒத்திவைக்கவில்லை. மறைக்க வேண்டிய எந்தவொரு காரணியும் இருக்கவில்லை. ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு அமைய நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை 11ஆம் திகதி கூட்டவிருந்த போதிலும் 18 ஆம் திகதி கூட்டப்படும். அதேபோல் எமது நிதிஅமைச்சர் தனது வேலைத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

எந்தவித ஒளிவு மறைவும் எம்மத்தியில் இல்லை. இது சில வேளைகளில் எமக்கே பாதிப்பாக அமையும். ஆனால் உண்மைகளை மக்களுக்குக் கூறி நடவடிக்கைகளை எடுக்கின்றார். அமைச்சரவையிலும் அதனை பேசுகின்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் இன்று எம்மிடம் வெவ்வேறு காரணிகளை கூறுகின்றனர். இன்று நாம்பாரியதொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இப்போதும் கடினமான காலகட்டமாகும்.

ஆனால் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றோம். தட்டுப்பாடுகள் இல்லாது மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

அதேபோல் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை எடுப்போம். – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *