அமைச்சரவையில் மாற்றம்!- ஜனவரி முற்பகுதியில் மேற்கொள்ளத் தீர்மானம்

அடுத்த வருடம் ஜனவரி மாத முற்பகுதியில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சபை அமர்வுகள் கூடுவதற்கு முன்பதாக அமைச்சரவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. 

அதன்படி, புதுமுகங்களுக்கும் சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.

அரசுக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக, அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்களும் தொடர்ந்து அரசின் சில செயற்பாடுகளை நேரடியாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, அமைச்சரவையில் மாற்றங்களை முன்னெடுப்பதற்கு அரசு தயாராகின்றதா என அரசின் உயர்மட்ட அதிகாரியிடம் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில், விவசாயத்துறை அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, வலுசக்தி அமைச்சு, மின்சக்தி அமைச்சு மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட சில முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை முன்னெடுக்கலாம் எனவும் அறியமுடிந்தது.

குறிப்பாக, அரசின் செயற்பாடுகளை நேரடியாக விமர்சித்துவரும் விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்டோரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை முன்னெடுப்பதற்கு கவனம் செலுத்தப்படுவதாக அறியமுடிந்தது.

மேலும், விவசாயத்துறை மின்சக்தி அமைச்சுகளில் மாற்றங்கள் முன்னெடுக்கப்படலாம்.

புதிய முகங்களுக்கும் சில முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் அமைச்சு அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம்.

நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்த காரணத்தினால் அரசை விமர்சித்த கோப் குழு உள்ளிட்ட பல குழுக்களின் தலைமையில் மாற்றங்கள் ஏற்படவுள்ள நிலையில், 18 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் கூடுவதற்கு முன்னர் அமைச்சரவையிலும் மாற்றங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அதிகம் கவனம் செலுத்தியுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *