போர் முடிந்து 13ஆவது ஆண்டில் காலடி வைக்கும்போதாவது அரசு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்! சிவாஜிலிங்கம்

போர் முடிந்து 13ஆவது ஆண்டில் காலடி வைக்கும்போதாவது அரசு இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது தான் நாங்கள் ஆட்சியாளர்களுக்கு சொல்லக்கூடிய ஒன்று. இல்லாவிட்டால் எங்களுக்கு நீங்கள் களம் அமைத்து தாருங்கள். அந்த களத்தினை விரிவுபடுத்தி நாங்கள் இங்கே எமது ஆட்சியை நிறுவுவதை விட வேறு வழியில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்று கீரிமலையில் காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிலஅளவைத் திணைக்களம் கீரிமலையில், ஜனாதிபதி மாளிகை உள்ளடங்கிய 34 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு பொது மக்களுக்கு அறிவித்து தற்போது அதனை அளப்பதற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், மக்களும், மக்கள் பிரதிநிதிகளான நாங்களும் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து இதற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளோம்.

அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டு வருகின்றது. இப்போது சட்டத்தின் புதிய பிரிவுகளை பாவித்து காணிகளை சுவீகரிப்பு செய்வதற்கு முயல்கின்றது.

சீனாவின் வருகை போன்றவற்றிலே இங்கு பல காணிகள் 600 ஏக்கர்களாக பிரித்து சீனாவின் கடற்படைகளுக்கு கொடுக்க போகின்றீர்களா? என இன்று நேற்று அல்ல நான்கு ஆண்டுகளாக நாங்கள் கேட்கின்றோம்.

வட்டுவாகலில் இருந்த கோட்டபாய கடற்படை முகாம் அமைந்துள்ள 616 ஏக்கர் காணிகளை அளக்க முடிவு எடுத்தபோது நாங்கள் அதற்கு தடையாக இருந்ததால் எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை சேதப்படுத்தினோம் என்றும், தடுத்து நிறுத்தினோம் என்றும் சட்டவிரோதமாக கூடினோம் என்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தொடர்ந்து நாங்கள் இதனை தடுத்து கொண்டிருக்க முடியாது. அரசாங்கம் இதற்கு சரியானதொரு முடிவை எடுக்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தனது காணியை விற்பதற்கு இங்கு வந்து போனதாக தெரியவருகின்றது.

இதனடிப்படையில் பார்க்கும்போது நீங்கள் உங்களது சொந்த காணிகளை பற்றியோ மக்களது பிரச்சினைகளை பற்றியோ கருத்தில் எடுக்கவில்லை எனத் தான் தோன்றுகிறது.

ஆகவே, அரசு இந்தக் காணிகளை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். சங்கானையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *