தேசிய பாதுகாப்பு என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சமையல் அறையில் வெடிகுண்டுகளை கொடுத்துள்ளது! ஜெ.சி.அலவதுவல

தேசிய பாதுகாப்பு என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் சமையல் அறையில் வெடிகுண்டுகளை கொடுத்துள்ளது என்றும் எரிவாயு வெடித்தது தற்செயலானதல்ல, இதற்கு அரசாங்கமே காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவதுவல இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று நாடு ஒரு துரதிஸ்டமான நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. எமது மக்களின் வாழ்வு ஒவ்வொரு அம்சத்திலும் சிதைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மூன்று மாதங்களுக்கும் மேலாக எரிவாயு பிரச்சினை நீடிக்கிறது. நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் நாற்பது சதவீதம் பேர் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர்.

தேசிய பாதுகாப்பு என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் சமையல் அறையில் வெடிகுண்டுகளை கொடுத்துள்ளது.

எதிர்க்கட்சி என்ற ரீதியில் இது தொடர்பில் தொடர்ச்சியாகப் பேசினோம். சி.ஐ.டி.யில் முறைப்பாடு அளித்தோம். ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் விசாரணைகள் நடைபெறவில்லை.

நான் லிட்ரோ நிறுவனத்திற்குச் சென்றேன். எரிவாயு நிறுவனம் அரசாங்கத்திற்கு செந்தமானது. 600 மேற்பட்ட வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கலவையை மாற்றிய எரிவாயு சிலிண்டர்கள் சிவப்பு ஸ்டிகர்கள் தற்போது வெடிக்கின்றன. வாசனையும் நுகர்வும் இல்லை. நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40 வீத மக்களுக்கு யார்பொறுப்பு. பாதுகாப்பான முறையில் எரிவாயுவை வழங்க முடியாவிட்டால் எதற்கு ஓர் அரசாங்கம்.

இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் தன்டனை சட்டத்தை பிரயோகிக்கவும். இதற்கு பின்னால் உயர் மட்ட அரசியல்வாதிகள் உள்ளனர்.

எரிவாயு விலை அதிகரித்த பின்னரே இச் சம்பவங்கள் இடம்பெறுகின்றது. அரசாங்கமே இத்தகைய நிலையை உருவாக்கியது. இதனாலயே அரசாங்கம் எந்தவித நடவடிக்கைளையும் மேற்கொள்ளாது உள்ளது.

எரிவாயு நிறுவனங்களுக்கு பின்னால் அரசாங்கம் உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எரிவாயு நிறுவனத்தின் தவிசாளர் உட்பட பனிப்பாளர் சபை ஒரு கொடூரமான குற்றத்தை செய்துள்ளனர்.

எரிவாயு வெடித்தது தற்செயலானதல்ல, எரிவாயு தொட்டிகளின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டது. இது மக்களுக்கு எதிரான செயல் நடவடிக்கையாகும்.

அரசாங்கம் என்ற ரீதியில் இதற்கு யார் பொறுப்பு? ஒட்டுமொத்தமாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை தெளிவாக கூற வேண்டும். எரிவாயு நிறுவனம் நாட்டு மக்களை ஏமாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 100வீதம் அரசாங்கத்திற்கு சொந்தமானது. அதன் தலைவராக இருப்பவர் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் வியத் மகவைச் சேர்ந்தவர்.

இதனை அமைச்சர் ஜோன்ஸ்டனோ, நுகர்வோர் வாணிப அமைச்சரோ ஒன்றும் தெரியாது என கூற முடியாது. அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும்

நிறுவன தலைவரை மட்டும் பொறுப்பேற்க முடியாது. உயர் மட்ட அழுத்தம் இன்றி தவிசாளரால் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. இதற்கு அரசாங்கமே முழு பொறுப்பு. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வந்த அரசால் எரிவாயுவுக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை. அதற்கு காரணமானவர்கள் மீது குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்துமாறு மீண்டும் கூறுகிறோம்.

நாட்டின் அதியுயர் அரசியல் ஆலோசனையின் பெயரிலேயே எரிவாயு நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தன. சில நிறுவனங்கள் எரிவாயுவை இறக்குமதி செய்யவில்லை. தரமற்ற எரிவாயுவை லிட்ரோ மட்டுமே கொண்டு வந்ததால் மக்கள் வரிசையில் நின்றனர். எரிவாயு விலை உயர்வை அடுத்து இந்த நிலை ஏற்பட்டது.

அதனால்தான் அரசாங்கம் வேண்டுமென்றே ஒரு சூழ்நிலையை உருவாக்கி, இதுவரை யாரையும் தண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நாட்டு மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுகின்றனர். பிரச்சினைகளை மக்கள் பக்கம் திருப்பி மக்களை சிரமங்களுக்கட்படுத்தி நாட்டை வக்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர். இதற்கிடையில் ராஜபக்ச குடும்பமும் அமைச்சரவையும் நாட்டு மக்களை கேலி செய்கின்றனர். இந்த அரசாங்கம் இனவாதத்தையும், மதவாதத்தையும் ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றியது.

வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றிய பின்னர் ஆளும் தரப்பு உறுப்பினர்களால் கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்ப்ட்டுள்ளது. இதன் காரணத்தினாலயே வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வெளியில் வந்து ஊடகங்களுக்கு வேறு ஒன்றைக் கூறினார்கள். இது மக்களை ஏமாற்றும் வெளிப்படையான நாடகமாகும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *