வவுனியா பேராறு திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைச்சர் வாசுவிடம் மகஜர் கையளிப்பு!

வவுனியா பேராறு நீர்த்ததேக்கத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டது.

வவுனியாவுக்கு இன்று பேராறு குடிநீர்த்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக வருகைதந்த நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவநாணயக்காரவை சந்தித்த பத்தினியார்குளம் கமக்காரர் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளினாலேயே மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா நகரிற்கான குடிநீர்வழங்கும் நோக்கத்திற்காக சாஸ்த்திரிகூழாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பேராறு நீர்த்தேக்க திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த 2013ஆம் ஆண்டு 165 ஏக்கர் வயற்காணிகளும் 50 ஏக்கர் வரையிலான மேட்டுக்காணிகளும் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்காக காணிகளை வழங்க விவசாய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை காட்டியமையினால் 2007ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட மேற்படி செயற்திட்டம் 2013ஆம் ஆண்டு வரையில் ஆரம்பிக்கப்படாதிருந்தது.

இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு முத்தரப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்ட பின்னர் காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டடிருந்தன.

முத்தரப்பு ஒப்பந்தத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் தலைவர், வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் கமக்காரர் அமைப்புகள் கைச்சாத்திட்டிருந்தன.

அதில் உறுதியளிக்கப்பட்ட சில விடயங்கள் அரசாங்கத்தினால் செய்து முடிக்கப்பட்டபோதிலும் மாற்றுக்காணிகளுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கல், புனரமைக்கப்பட்ட பாசனக்குளங்களுக்கான நீர்வரத்து, வயற்காணிகளுக்கான போக்குவரத்து வசதிகள், பாசன கால்வாய் புனரமைப்பு, பாதிக்கப்பட்ட விவசாயக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு போன்றன ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தும் இதுவரை செய்துதரப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டு கடிதம் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

கடிதத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் வாசுதேவநாணயக்கார கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கமக்காரர் அமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை முதல் விநியோகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *