30 வயது பெண்ணிற்கு திருமண தொல்லை கொடுத்த 70 வயது முதியவர் விளக்கமறியலில்: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 30 வயதான இளம்பெண்ணிற்கு திருமணத் தொல்லை கொடுத்து வந்த 70 வயதான முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கரணவாய் குருக்கள் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணை, திருமணம் செய்யுமாறு தொல்லை கொடுத்த, கரவெட்டி மத்தொணி பகுதியைச் சேர்ந்த 70 வயதான முதியவரே, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் அந்த இளம்பெண் பணிபுரிந்து வருகிறார்.

அவர் மீது காதல் வசப்பட்ட 70 வயதான முதியவர், அவரை நிழல் போல பின்தொடர்ந்து வந்துள்ளார்.

ஓய்வூதியரான அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். தன்னை நம்பி வருமாறும், அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்றும் அவர் அப் பெண்ணை நச்சரித்து வந்துள்ளார்.

அந்த பெண் பணிக்கு செல்வதற்காக நெல்லியடி பேருந்து நிலையத்திற்கு வரும் போது, அங்கு வந்தும் அந்த பெண்ணிற்கு தொல்லை கொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண், நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு முறை முறைப்பாடு செய்துள்ளார். பொலிசார் தாத்தாவை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். எனினும், அவர் தொடர்ந்தும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அப்பெண் நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டிருந்த பொழுது, அங்கும் வந்து தொல்லை கொடுத்துள்ளார்.

முதியவரின் துன்புறுத்தல் தாங்கமுடியாத இளம்பெண், நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார்.

வழக்கினை ஆராய்ந்த பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் அவரின் மனநிலை தொடர்பில் மனநோயியல் வைத்தியரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நெல்லியடி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கனடாவில் கோர விபத்து: யாழ்ப்பாணப் பெண் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *