கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்குச் சம்பந்தன் அறிவுரை!

உள்ளூராட்சி சபையில் அல்லது மாகாண சபையில் அல்லது பாராளுமன்றத்தில், அனைத்து விடயங்களிலும் அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டால் எதனையுமே எம்மால் நிறைவேற்ற முடியாமல் – அமுல்படுத்த முடியாமல் – ஒரு முன்னேற்றத்தை அடைய முடியாமல் போய்விடும். அதனைச் சகலரும் மனதில் வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று தமிழ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் கடந்த புதன்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்தைக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் எதிர்த்திருந்தனர்.

ஆனாலும், வரவு – செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. இதன்மூலம் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முதல்வராகத் தொடர்ந்து பதவி வகிக்கவும் வாய்ப்புக் கிட்டியது.

இந் நிலையில், வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்த முடிவு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தமிழ் ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ். மாநகர சபையில் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சமர்ப்பித்திருந்த 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டதுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து வாக்களிப்பது தொடர்பில் எனக்கு எதுவும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தத் தீர்மானம் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்களால் எடுக்கப்பட்டிருந்தது. எனவே, இது பற்றி கருத்துக்கூற நான் விரும்பவில்லை.

ஆனால், எனது பொதுவான கருத்து என்னவெனில், உள்ளூராட்சி சபைக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது பாராளுமன்றத்துக்கோ தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும். அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் செயற்படுவதே அவசியமானதாகும்.

அதனை அடிப்படையாகக் கொண்டு சில முக்கியமான தீர்மானங்களை அவசியமான நேரங்களில் எடுக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு.

சகல விடயங்களிலும் அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டால் எதனையுமே எம்மால் நிறைவேற்ற முடியாமல் – அமுல்படுத்த முடியாமல் – ஒரு முன்னேற்றத்தை அடைய முடியாமல் போய்விடும். அதனைச் சகலரும் மனதில் வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும்’ – என்றார்.

மாணவனை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *