
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி:
கருணாகரம் எம்பி,அரியநேந்திரன், மட்டு. மேயர் உட்பட 32 பேர் ஆஜர்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன் உள்ளிட்டோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடத்தப்பட்ட மக்கள் பேரணியில் பொலிஸாரினால்,பெறப்பட்ட நீதிமன்றத் தடையுத்தரவை மீறி கலந்து கொண்டமை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன்,தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி தலைவர் கி.சேயோன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் .E.W.கமல்ராஜன், அம்பாரை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க தலைவி.த.செல்வராணி,தமிழரசுக் கட்சி உறுப்பினர் சயனொளிபவன் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் .தாமோதரம் பிரதீவன் ஆகியோர் உள்ளடங்கலாக 32 பேர் மீது பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலீசாரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையில் மேற்குறித்தவர்கள் ஆஜராகியிருந்த நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 2022 மார்ச் மாதம் 02ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் அவர்கள் 5 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்,பொத்துவில் பிரதேச சபை உப தவிசாளர் பெ.பார்த்தீபன் மற்றும் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுபோதரன் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டிருந்ததோடு குறித்த 32 பேருக்கும் நீதிமன்ற அழைப் பாணையை வழங்குமாறும் பணிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இவர்களுக்காக சட்டத்தரணி முனாஸ்தீன் உள்ளிட்ட ஆறு சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர்.