மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயணத்தடை விதிக்கும் அமெரிக்காவின் சமீபத்திய முடிவை சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் 09 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஏனைய ஜனநாயக நாடுகளும் பின்பற்ற வேண்டுமென புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன.
சர்வதேச மனித உரிமை தினத்தை குறிக்கும் விதத்தில் 2021 டிசம்பர் 21 -ஆம் திகதி இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
2008-2009 காலப்பகுதியில் 11 பேர் கடத்தி காணாமலாக்கப்பட்ட விவகாரத்திற்காக இலங்கையின் கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியராச்சிக்கு எதிராகவும், 2000-ஆம் ஆண்டு மீசாலையில் சிறுவர்கள் உள்ளிட்ட பத்து தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராகவும் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.
இவா்களில் முதலாவது நபர் விசாரணைகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இரண்டாவது நபர் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ முன்னர் அறிவித்த முடிவு தீா்க்கமாது. நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே இலங்கை படைத் தரப்பைச் சோ்ந்த மேலும் இருவருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நம்பகமான சாட்சியங்களின் அடிப்படையில் பாரிய அட்டூழியக் குற்றங்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது அமெரிக்க விதித்துள்ள பயணத் தடையை பின்பற்றி ஒத்த எண்ணம் கொண்ட சர்வதேச ஜனநாயக நாடுகள் செயற்பட வேணடும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கைத் தீவில் ஏழு தசாப்தங்களாக இனப்படுகொலை நடந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
அத்துடன், நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கை கண்டுகொள்ளப்படாதுள்ளது எனவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலிய தமிழர் காங்கிரஸ் (ATC), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), தமிழ் மக்கள் பேரவை – பிரான்ஸ் (Maison du Tamil Eelam- France), ஐரிஷ் தமிழர்கள் பேரவை(ITF), கனடிய தமிழர் தேசிய அவை (NCCT), சமாதானம் மற்றும் நீதிக்கான குழு (SGPJ – தென்னாப்பிரிக்கா), சுவிஸ் தமிழர் பேரவை(STAG), இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் இயக்கம் (மொரிஷியஸ்), ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக் குழுமம் (USTAG) ஆகிய தமிழ் அமைப்புக்கள் இணைந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன.