துரோகி, எதிரி, ஆயுதவாதி, ஜனநாயகவாதி என்ற பட்டங்களை எல்லாம் கொஞ்சம் இடைநிறுத்தி வைக்க வேண்டிய காலம் இதுவாகும்.இப்படி பழைய வரலாற்றை அலசி குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லவேயில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ் பேசும் கட்சிகளின் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் கூறியதாவது ;
யார் என்ன சொன்னாலும் இன்று தமிழ் அரசியல் பரப்பில், பிரதான பேசுபொருள், தமிழ்-முஸ்லிம் கட்சி தலைவர்களது கூட்டு செயற்பாடுதான். செல்வம், சித்தார்த்தன் கூட்டு முன்முயற்சியால் ஆரம்பமாகி இருக்கும் தமிழ்-முஸ்லிம் கட்சி தலைவர்களின் கலந்துரையாடல் பற்றி இன்று தமிழ் பேசும் ஊரெங்கும் பல பேச்சு.
சிலர் திட்டி தீர்த்து தம் மன விகாரங்களை காட்டுகிறார்கள். இவர்களுக்கு பெரும் பதில் சொல்லி, ‘காதலிக்க எனக்கு நேரமில்லை’.மிகப்பலர், ‘காலோசித காரியம்’ பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு நன்றி.
பல கட்சிகள் தங்களையும் இணைத்துக்கொள்ள சொல்கிறார்கள். ஆம், எமது அடிப்படைகளை ஏற்பவர்கள் அனைவரும்
படிப்படியாக உள்வாங்கப்படுவார்கள். நான் இது பற்றி சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்.
1)இப்படி பலமுறை கூடி கலைகிறார்கள் எவரும் சலிப்பது முறையல்ல.சமகாலத்தில் இத்தனை தமிழ் கட்சிகள் கூடி பேசுவது இதுவே முதல் தடவை.
2)இன்னொரு விஷேசம், இதில் ஈழத்தமிழ், மலையக தமிழ், முஸ்லிம் என தமிழ் பேசும் மூன்று தரப்பு கட்சி தலைவர்களும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.
3)போர் நிறுத்த காலகட்டத்தில், அன்றைய தமிழர் தலைமை பாத்திரம் வகித்த புலிகள், தமிழ் தேசிய பரப்பிற்கு வெளியே நான்கு கட்சி தலைவர்களை அங்கீகரித்து, அழைத்து பேசினார்கள். அவர்கள் சந்திரசேகரன், ஆறுமுகன் தொண்டைமான்,மனோ கணேசன், ரவுப் ஹக்கீம் ஆகியோர். இதில் முதலிருவர் இன்று உயிருடன் இல்லை.ஆகவே, அன்றே அழைக்கப்பட்டு, இன்றும் சாகாமல் இருக்கும், கட்சி தலைவர்களைதான் செல்வமும், சித்தார்த்தனும் அழைத்து, வரலாற்றை மீளஎழுதுகிறார்கள். அவ்வளவுதான்.
4) ‘மனோ அண்ணையும், இந்த 13க்குள் தமிழரை இறுக்கும், சதியில் சிக்கி விட்டார் என வேதனைபடுவதாக தம்பி
கஜேந்திரகுமார் நாகரீகமாக கூறுகிறார்.
‘அந்த கட்சி, இந்த கட்சி, வந்த கட்சி, தலைவர்கள்’ என எம்மை எடுத்தெறிந்து பேசி வேதனையடைய செய்து விட்டார்,
தம்பி சுமந்திரன்.
இவர்களுக்கு அண்ணன்’ என்ற முறையில் நான் காரசாரமாக பதில் கூற போவதில்லை.என்ன, இந்த கட்சி தலைவர் ஒன்றுகூடலின் அடிப்படை ‘தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச கோரிக்கை யோசனைகள்’ என்பதாகும்.
இந்த ‘குறைந்தபட்சம்’ என்பதன் அர்த்தம் 13 என்பது இறுதி தீர்வு அல்ல, என்பதாகும். இதை இந்த ஜனாதிபதி, பிரதமர் சட்டத்தரணி தம்பிகளை புரிந்து எம்முடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.