அப்பாவி தமிழ் இளைஞர்களை கைதுசெய்யும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுங்கள்! ரிஷாட் எம்பி

அப்பாவி இளைஞர்களை கைது செய்யும் மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றி மனிதர்களுக்கு ஏற்ற சட்டமாக உருவாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்த அரசாங்கம் ஒரு கொள்கையுடன் பயணிப்பதாக எமக்கு தெரியவில்லை. தேர்தலுக்கு முன்னர் ஒன்றை சொன்னார்கள் அதன் பிறகு ஒவ்வொன்றும் மாறி நடக்கின்றது.

இன்று விவசாய செய்கைக்குரிய பசளை இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இலவசமாக தருவோம் என்றார்கள்.

ஆனால் இன்று 20 ஆயிரம் ரூபாய்க்கு கூட அது கிடைக்கவில்லை. சீனாவில் இருந்து வந்த பசளைக்காக பணம் வழங்குவதென அமைச்சரவையில் தீர்மானித்திருக்கின்றார்கள்.

நாட்டுமக்கள் கஸ்டப்படும்போது பலகோடி ரூபாய் பணத்தை சீனாவுக்கு வழங்குவது இந்த நாட்டிற்கு ஏற்பட்ட பாரிய நஸ்ரமாகும்

நாட்டில் உணவுக்கே மக்கள் கஸ்ரப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு இந்த நாடு தொடர்ந்து பயணித்தால் அதல பாதாளத்திற்கு செல்லும் நிலமையே ஏற்படும்.

பயங்கரவாத தடைச்சட்டமானது இந்தநாட்டிலே ஒரு அவசரத்திற்காக தற்காலிகமாக அந்தகாலப்பகுதியிலே கொண்டுவரப்பட்டது.

அந்தச்சட்டத்தினை பயன்படுத்தியே பாராளுமன்ற உறுப்பினரான என்னை கைதுசெய்தார்கள். அதே போல கிளிநொச்சி முல்லைத்தீவு, மட்டக்களப்பு பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் இரண்டு வருடம் என சிறையிலே வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்கின்றார்கள் என்ற அடிப்படையில அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

அவர்களிடம் பணம் இல்லை அதனால் சட்டத்தரணிகளை நியமிக்கும் வாய்ப்பில்லாமல் மிகவும் கஸ்ரப்படுகின்றார்கள். அதேபோல 300வரையான முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் இருக்கிறார்கள்.

அவர்களில் 40 பேருக்கு வழக்குத்தாக்கல் செய்துள்ள நிலையில் ஏனையவர்களுக்கு வழக்குத்தாக்கல் எதனையும் செய்யாமல் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழே சிறையிலே வாடுகின்றார்கள்.

இந்தச்சட்டத்திலே உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று உலகமே வேண்டி நிற்கின்றது. இந்த நாட்டிலே ஆகப்பெரிய ஏற்றுமதி பொருளாதாரமாக ஆடைத்தொழிற்சாலைகள் இருக்கின்றது.

எனவே அதனால் கிடைக்கின்ற ஜிஎஸ்பி வரிச்சலுகையை நிபந்தனையாக வைத்து இந்த சட்டத்தை மாற்றி சர்வதேசத்தோடு உள்ள சட்டங்களாக உருவாக்குமாறு கேட்டிருக்கின்றார்கள்.

அந்த வரிச்சலுகை கிடைக்காமல் போனால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி வரக்கூடிய ஆபத்து ஏற்படும்.

ஆகவே, நாம் இந்தமோசமான பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்து மனிதர்களுக்கு ஏற்ற சட்டமாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அத்துடன்13 வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான அனைத்து கட்சி கலந்துரையாடலுக்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *