ஷாபி விடயத்தில் சாதுக்கள் தாண்டவம்: முஸ்லிம்களை இலக்குவைக்கும் பேரினவாதம்!

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை சர்வதேச அமைப்புக்கள் பதிவு செய்துள்ளன. இன ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் ஓர் இனத்தின் அடையாளங்கள், தலைவர்கள், புத்திஜீவிகள் இலக்கு வைக்கப்படுவது இலங்கையில் எப்போதும் நடக்கும் சம்பவங்களாக மாறிவிட்டன.

இலங்கையைப் பொருத்தவரை சிங்களப் பேரின வாதிகளால் சிறுபான்மை இனமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குப் பிறகு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது என்றே கூறவேண்டும். இந்த இனவாதத் தீயில் சிக்கியவர்களில் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் முக்கியமானவர்கள்.

இப்போது இலங்கையின் முக்கிய பேசுபொருளாக இவருடைய பணி இணைப்பு அமைந்துள்ளது. வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத சுகாதார அமைச்சின் செயலாளரை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசாரணை அறிக்கையை பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்புவதற்காக முன்னாள் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர்களை பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்; வலியுறுத்தியுள்ளார்.

வைத்திய கலாநிதி ஷாபி ஷிஹாப்தீன், அவருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு அப்போது அரசாங்கத்தில் அங்கம்வகித்த முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு பதவிவிலக ரத்ன தேரரே காரணமாகயிருந்தவர். இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னின்று மேற்கொள்ளும் சாதுக்களில் ரத்ன தேரர் சளைத்தவரல்ல.

இது இவ்வாறு இருக்க, சட்டவிரோதமான முறையில் கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாகக் குற்றம்சுமத்தப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை மீளப் பணிக்கு அழைப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லையென அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழு தெரிவித்துள்ளது.

சுகாதார செயலாளரின் பணிப்புரையின் பேரில், தாபனங்கள் சட்டத்தின் 12ஆவது அத்தியாயத்தின் 22 சரத்துக்கமைய, 2019 மே 11 ஆம் திகதி முதல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்காக குழுவொன்றை நியமித்து கூடிய விரைவில் அறிக்கையொன்றை அனுப்புமாறு அறிவித்திருந்த போதிலும் அது தொடர்பான அறிக்கை தமக்குக் கிடைக்கவில்லை என அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழுவின் செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனின் சம்பள நிலுவையைச் செலுத்தி மீண்டும் அவரை பணியில் அமர்த்துமாறு குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முணசிங்க, கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையே பௌத்த பிக்குகளின் கொத்தளிப்புக் காரணமாகவுள்ளது.

வைத்தியர் ஷாபி விடயத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பை மீளப்பெற்று உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஷாபி விடயத்தில் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நாட்டில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஸாபியை மீண்டும் பணிக்கு அழைப்பதும் அவருக்கான கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த காலத்தில் அவருக்கான முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மூலமாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ரத்ன தேரரின் நெருக்கடியால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த ரிசாட் பதியுதீனுக்கு உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சர்வதேச அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெட்டத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியமே இவ்வாறு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் சட்டவிரோதமான கைது தொடர்பாக நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில்:

உலகின் 179 தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் 13 பிராந்திய நாடாளுமன்ற சபைகளினை அங்கத்துவமாகக் கொண்ட, தேசிய பாராளுமன்றங்களின் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகிய நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் கைது மற்றும் தடுப்புக் காவல் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அவ்விடயம் தொடர்பான தனது முடிவை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, மே மாதம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து, நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமானது, குறித்த முறைப்பாட்டினை மிகத் தீவிரமாக விசாரணை நடத்தியது.

கடந்த நவம்பர் 30ஆம் திகதியன்று ஸ்பெயினின் மட்ரிட் நகரில் நடைபெற்ற நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியத்தின் 208 ஆவது அமர்வில், இந்த விடயத்தின் மீதான முடிவு, ஒன்றியத்தின் ஆளும் குழுவால் ஏகமனதாக விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், ‘ஈஸ்டர் தாக்குதல்களுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்தார்’ என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால், இன்று வரையில் அது தொடர்பான எவ்வித ஆதாரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

சினமன் கிராண்ட் ஹோட்டல் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட இன்சாப் அஹமட் என்பவருக்குச் சொந்தமான கொலஸியஸ் பிரைவட் லிமிட்டட் நிறுவனம், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து ஏற்றுமதி உரிமத்தைப் பெற முயற்சித்ததாக குறித்த குற்றச்சாட்டு கூறுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் மேற்கொண்ட விசாரணைகளிலிலிருந்து, மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ரிசாட் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த ஒன்றியமானது, ரிசாட் பதியுதீன் எம்.பி கைது செய்யப்பட்டதன் தன்மை, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் தன்மை மற்றும் குறித்த வழக்கில் தொடர்ச்சியாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் உட்பட பல காரணிகளை கவனத்தில் எடுத்தது.

ரிசாட் பதியுதீன் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உடனடியாக பரிசீலிக்காத நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக குறித்த ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை ரிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு 06 மாதங்களுக்குப் பிறகு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும், அவரை சந்தேக நபராக ஆக்குவதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதற்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.

ஆகையால், இந்த விடயம் தொடர்பில், அவருக்கு எதிரான நம்பத்தகுந்த எந்தவொரு ஆதாரங்களும் எமக்குக் கிடைக்கப்பெறாத காரணத்தால் ரிசாட் பதியுதீன் எம்.பியின் முறைப்பாடு நியாயமானது என்றே நாம் கருதவேண்டியுள்ளது என்றும் ஒன்றியம் தெரிவித்துள்ளது

மேலும், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் எவ்வித திருத்தமோ அல்லது நீக்கமோ இன்றி, தற்போதைய வடிவிலினிலேயே இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்றும் குறித்த ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு அமைப்புக்கள், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பல தடவைகள் கடுமையான அக்கறையினை வெளிப்படுத்தியுள்ளதுடன், இலங்கையிலுள்ள அதிகார சபைகளும் அவ்வாறான திருத்தங்களுக்கு தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தவோ அல்லது நீக்கவோ இதுவரை இலங்கையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்துவது அல்லது நீக்குவது தொடர்பில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால், அது தொடர்பான எந்தவொரு நகர்வினையும் இலங்கை அரசாங்கம் தமக்கு அறிவிக்குமாறு குறித்த ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஏதேனும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அதுபற்றி தங்களிடம் தெரிவிக்குமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இதன்மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அரச இயந்திரம் இன அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவது தெட்டத் தெளிவாகியுள்ளது.

எனவே, சிங்களப் பேரினவாதத் தீயில் சிக்கி சிதைந்து போகாது சிறுபான்மை இனங்களாக அடையாளப்படுத்தப்பட்டு ஒடுக்கமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ்பேசும் மக்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது இருப்புக்கு அவசியமாகும்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *