
ஒரு நாடு, ஒரு சட்டம் உருவாக்கும் பொறுப்பு, அளவுக்கதிகமாக மதுபானம் அருந்திவிட்டு பொலிஸாரைக் கூடக் கெட்ட வார்த்தைகளால் திட்டும் ஞானசாரரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதைவிட பொடி லவி, மதுஷ் போன்றோருக்கு அந்தப் பொறுப்பை வழங்கியிருக்கலாம்.இவ்வாறு விமர்சித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினர் விஜிதமுனி சொய்சா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும். ஒழுக்கமான சமூகக் கட்டமைப்புகளுக்கே இந்த நிறுவனங்கள் நிதியுதவி வழங்கும். நாட்டின் தற்போதைய ஆட்சி மாறி, நியாயமான, நீதியான, ஜனநாயக விழுமியங்களை கொண்ட ஒருவர் நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டால் உலக நாடுகள் உதவிகளை வழங்கும்.
குடும்ப சார்பு, சாதியவாத, இனவாத, மதவாத மற்றும் பயங்கரவாத தலைவராக இருக்காது, நியாயமான நீதியான தலைவர் இந்த நாட்டை பொறுப்பேற்றால் கட்டாயம் சர்வதேசத்தின் உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும். அப்போது எம்மால் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியும். தீர்க்கும் முறை எம்மிடம் உள்ளது. சஜித் பிரேமதாச தொடர்பில் எமக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருக்கின்றது.- என்றார்.