கிண்ணியா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தம் நடந்த தினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த பலர் கைது செய்யப்பட்டு இருப்பதோடு, மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த பெனாண்டோ தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேசத்தில் சமூகப் பாதுகாப்பு குழு அமைப்பது தொடர்பாக கிராம சேவகர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று நேற்று(18) பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்தையோ பொதுச் சொத்துக்களையோ பற்றி அறிவு இல்லாத இளைஞர்கள் சிலரது தூண்டுதல்களுக்கு இலக்காகி இந்த அசம்பாவிதத்தை செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு மறைந்திருந்து தூண்டியவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இனிமேலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் இந்தப் பிரதேசத்தில் நிகழக்கூடாது என்பதற்காகவே இதற்கு எதிராக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்தப் பகுதி இஸ்லாமிய கலாச்சாரத்தோடு வாழ்கின்ற ஒரு பிரதேசமாகும். இங்கே இவ்வாறான அசம்பாவிதம் நடைபெற்றிருப்பது கவலை அளிக்கின்ற விடயமாகும்.
இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாயல்களில் நற்சிந்தனைகள் வழங்கப்படுகின்றன.
ஆனாலும் பிரச்சினைகளும் முரண்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
கணவனோடு ஏற்படுகின்ற முரண்பாடுகள் காரணமாக குழந்தைகளோடு, பொலிஸ் நிலையத்துக்கு வருகின்ற தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எங்களால் தீர்க்க முடியுமான பிரச்சினைகளை மட்டும் தீர்த்து விட்டு, ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பள்ளிவாயில்களுக்கே அவர்களை அனுப்பி வைக்கின்றோம்.
குடு, கஞ்சா, ஐஸ் போன்ற போதைப்பொருள் வியாபாரமும் இந்த பிரதேசத்தில் அதிகரித்து வருகின்றது. இந்த வியாபாரத்தில் ஈடுபட்ட 8 நபர்கள் இப்போது சிறையில்
அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் போதைப் பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு போதாமல் இருக்கின்றது. ஐந்து வீதமானவர்களே எமக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
எனவே எதிர்காலத்தில், இந்தப் பிரதேசத்தில் குற்றச் செயல்களை குறைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இவ்வாறான சமூக பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.