இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்படாமலிருக்க முடியாது! கருணாகரம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இனியும் பதிவுசெய்யப்படாமல் இருக்க முடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரைக்கும் 20 வருடங்களையும் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் பதியப்படாத நிலையிலுள்ள ஒரு அரசியல் கூட்டாகவே இருக்கின்றது. இது மிகவும் துரதிர்ஸ்டவசமானது.

மலையக கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முன்னணியை உருவாக்கியிருந்தார்கள்.

மூன்று வருடத்திற்குள்ளே அவர்கள் அதனை ஒரு அரசியல்கட்சியாக பதிவுசெய்துள்ளார்கள்.

அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் ஐயா தொடர்ச்சியாக இருந்துவருகின்றார்.

சம்பந்தர் ஐயா திருகோணமலை பாராளுமன்ற உறுப்புரிமையினை இராஜினாமா செய்யப்போவதாக தற்போது பத்திரிகை ஊடாக அறியக்கூடியதாகவுள்ளது.

இது எந்தளவுக்கு உண்மையென்று தெரியாவிட்டாலும் அப்படியொரு நிலைமையேற்பட்டால் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இருப்பவர் சம்பந்தன் ஐயா,பாராளுமன்ற உறுப்பினர் பதவி வலிதற்றதாகும்போது தலைமை பொறுப்பையும் இழப்பார்.

இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலிருந்து விலக்க வேண்டிய தேவையில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வகிப்பவர் பாராளுமன்ற உறுப்பினராகயிருக்க வேண்டும் என்ற நியதியில்லை.

அவர் விரும்பி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவியை துறப்பாரானால் தமிழ் தேசிய கூட்டத்தின் ஆரம்பத்திலிருந்து அங்கம் வகிக்கும் கட்சி என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு உறுதியான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளது.

இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்படாமலிருக்க முடியாது.

ஒரு தனிமனிதனின் தலைமைத்துவதிற்குள் இல்லாமல் இணைத்தலைமையொன்று உருவாக்கப்படவேண்டும் என்பதிலும் உறுதியாகவுள்ளோம்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *