அடுத்த வருடம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் உதவி தகவல் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அரச வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகள் அடுத்த வருடம் நிரந்தரமாக்கப்பட்ட பின்னர் அனைத்து பிரதேச செயலகங்களிலும் உதவி தகவல் உத்தியோகத்தர் ஒருவர் என்றடிப்படையில் 340 பேர் நியமிக்கப்பட உள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார் .
மாவட்ட செயலக பொதுசன தொடர்பு அதிகாரிகளுக்கு கடந்த17, 18ஆம் திகதிகளில் கண்டியில் நடைபெற்ற செயலமர்வின் போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பிரதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அப்பிரதேசங்களில் காணப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சரியான முறையில் பெற்றுக் கொண்டு அவற்றை மக்கள் அறியும் நோக்கில் அறிக்கையிடல் இவர்களுடைய நியமனம் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதேச ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பல பிரதான ஊடகங்கள் பலவற்றின் கவனத்திற்கு தென்படாமல் காணப்படுகின்றது.
அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த உத்தியோகத்தர்கள் மூலம் சரியான முறையில் தகவல்களை பெற்றுக்கொண்டு அவற்றை தேசிய ரீதியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.
இதன் மூலம் மக்களுக்கு குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பவற்றை அறியும் வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
மாவட்ட ஊடகப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் 10 புகைப்பட கருவிகள் 10 மாவட்ட ஊடகப்பிரிவுகளுக்கு இதன்போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, மேலதிகப் பணிப்பாளர் நாயகம் (ஊடகம்) மிலிந்த ராஜபக்ச, மேலதிகப் பணிப்பாளர் நாயகம்(நிர்வாகம்) லேகா பதிரன, உதவிப் பணிப்பாளர் எல்.பி .திலகரத்ன, உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.