மட்பாண்டங்களை உற்பத்தி செய்யும் மூலப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுவதால், மண் அடுப்பு உள்ளிட்ட மட்பாண்ட உற்பத்தி செய்வதில் தாம் பல சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக புத்தளம் மாவட்ட மட்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழிலுக்கு பெயர் போன இடமாக புளிச்சாக்குளம் பிரதேசம் காணப்படுகிறது.
இங்கு 28 மட்பாண்ட தொழிற்சாலை காணப்படுவதுடன், 75 இற்கும் அதிகமான குடும்பங்கள் மட்பாண்ட உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் முறையான வழிகாட்டல் இன்மை, அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களால் உதவிகள் இன்மை போன்றவற்றால் இந்த மட்பாண்ட உற்பத்தி தொழிலை முன்னெத்துச் சென்ற இளைஞர்கள் பலர் இந்த தொழிலை கைவிட்டு விட்டு வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் வேறு தொழில் துறைகளுக்கும் சென்றுள்ளனர்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளுக்கு மாத்திரம் இன்றி, வெளிநாடுகளுக்கும் இங்கிருந்துதான் மட்பாண்டங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக மட்பாண்ட உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள், உறுதியாகவும், நேர்த்தியாகவும், தரமாகவும் இருப்பதால், வெளி மாவட்டங்களில் புளிச்சாக்குளம் மட்பாண்டங்களுக்கு வரவேற்பு உள்ளது.
நாட்டில் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, மக்கள் எரிவாயு அடுப்புக்களை பாவிப்பதை தவிர்த்து, தற்போது மண் அடுப்புக்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும், முன்னரே விட தற்போது மண் அடுப்புகளுக்கு அதிக கேள்வி உள்ளதுடன், இலங்கையின் பல பிரதேசங்களில் இருந்து அதிகமான ஓடர்களும் வருவதாகவும் உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும், மண் அடுப்பு, மண் பானை உள்ளிட்ட மட்பாண்ட உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் இன்றி தாம் பல சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக புளிச்சாக்குளம் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மண் அடுப்புக்களை உற்பத்தி செய்ய தேவையான பருமணல் பன்னல பகுதியிலிருந்தும், களிமணல் பிங்கிரிய பகுதியிலிருந்தும் கொள்வனவு செய்து வருகின்றனர்.
பருமணல் டிப்பர் ஒன்றினால் மூலம் 35 ஆயிரம் ரூபாவுக்கும், களி மணல் 30 ஆயிரம் ரூபாவுக்கும் கொள்வனவு செய்வதாகவும் , அதிக விலை கொடுத்து விறகுகளும் கொள்வனவு செய்யப்படுவதாகவும் இதனால், உற்பத்தி செலவுகள் அதிகமாக காணப்படுவதனால் பெரும் நஷ்டத்தில் இந்த தொழிலை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனினும், களி மணல் அகழ்வதற்கு பொருத்தமான ஒரு இடத்தை அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்தால், அதிகமான மண் அடுப்புக்களை உற்பத்தி செய்வதுடன் மேலும் பலருக்கும் தொழில்வாய்ப்புக்களையும் வழங்க முடியும் எனவும் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
களி மணல் அகழ்வு தேவையான காணிகளை பணம் கொடுத்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும், புளிச்சாக்குளம் மட்பாண்ட உற்பத்தியாளர் சங்கம் அதற்கும் தயாராக உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.பி.ஆனந்த தெரிவிக்கின்றார்.
கொரோனா, வெள்ள அனர்த்தம் என்பவற்றால் தாம் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், இந்த தொழிலை விடாமல் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் சங்கத்தின் தலைவர் மேலும் கூறினார்.



