இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த சீனா தீவிரம் காட்டத்தொடங்கிவிட்டது. இதேவேளை, இந்தியாவின் மௌனம் தமிழ் மக்கள் மத்தியில் புரியாத புதிராக உள்ளது. ராஜபக்ச அரசாங்கத்தின் புதிய அணுகுமுறையை ஏற்று சீனத் தூதுவர் செயற்படுகின்றார் என்ற சந்தேகப் பார்வையை சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் மீது திருப்பியுள்ளது. இந்நிலையில் வடக்கு மீனவர்கள் மீதான சீனாவின் திடீர் பாசம், தமிழ் மக்களின் கலாசாரம் மீதான மோகம் மக்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவரின் வடக்கு மாகாணத்திற்கான பயணம் குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம், இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்த இந்த விஜயம் உதவுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது
இதேவேளை, வடக்கின் முக்கிய இடங்களைப் பார்வையிட்ட போதும் அங்கு பேச்சுக்களை நடத்தியபோதும் அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு சீனத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மீனவர்களுக்கு வலைகள், நிவாரணங்கள் வழங்கும் தோரணையில் ஆரம்பிக்கப்பட்ட சீனத் தூதுவரின் வடக்கு பயணம், மன்னார் பகுதியில் இராமர் பாலத்தை பார்வையிட்டபோதும், பருத்தித்துறையிலிருந்து இந்தியாவின் தூரத்தை கேட்டறிந்த போதும் அவரின் விஜயத்தின் நோக்கம் வெளிப்பட ஆரம்பித்தது.
ஆனால், இந்தியாவின் மௌனம் இன்னும் கலையாமல் இருப்பதால் சீனாவின் அடுத்து கட்ட நகர்வுவரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இதேவேளை, சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் குறித்து தமிழர் தரப்பிலிருந்து முக்கிய விடயம் வெளிப்பட்டுள்ளது.
சீனத் தூதுவரின் வடக்கிற்கான விஜயம் முக்கியமானதல்ல. அதனைத் தாண்டி தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளில் அதற்கான தீர்வு விடயத்தில் சீனாவின் கொள்கை என்னவாகவுள்ளது என்பதே எமது கேள்வியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை விடயத்தில் சீனாவின் நிலைப்பாடு எவ்விதமாகவுள்ளது என்பதே எமக்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங்கின் வடக்கு விஜயம் மற்றும் அவரது வடக்கு கண்காணிப்பு செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவிய போதே சம்பந்தன் இவ்வாறு கூறினார்.
இலங்கைக்கான எந்தவொரு தூதுவரும் இலங்கையில் எந்தவொரு பிரதேசத்தையும் பார்வையிட முடியும். அதற்கான உரிமை உள்ளது.
ஆனால், எம்மையும் எமது மக்களையும் பொறுத்த வரையில் அவரது விஜயம் முக்கியமானதல்ல. எம்மைப் பொறுத்தவரையில் அவர்களின் அடிப்படை கொள்கைகள் என்னவாகவுள்ளது என்பதே எமது கேள்வியாகும்.
இலங்கையில் அரசியல் பிரச்சினைகள் பலமடைந்துள்ளன. சீனாவோ அல்லது சீனாவின் தூதுவர்களோ இனப்பிரச்சினை குறித்து அரசியல் தலைமைகளை சந்தித்து அதற்கான தீர்வுகளை இதுவரை முன்வைக்கவில்லை.
இதுவரை காலமாக அவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் இந்த விஜயம் எமக்கு அர்த்தமற்ற ஒன்றாகவே இருக்க முடியும்.
நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களும் ஒற்றுமையாக, சமத்துவத்தின் அடிப்படையிலும், நீதியின் நியாயத்தின் அடிப்படையிலும் வாழ வேண்டும் என்பது குறித்து அவர்கள் எதனையும் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியதாகவும் இதனால் வடபகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் வைத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘சிறிமாவோ பண்டார நாயக்கா காலப்பகுதியில் இருந்து இலங்கையானது சீனாவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோது இலங்கை நடுவுநிலையாக செயற்பட்டிருந்தது.
தற்போதும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை காணப்படுகின்றது. அதனை நாம் ஜனாதிபதியுடன் பேசியே முடிவுகளை எடுத்து வருகின்றோம்.
நாம் எந்தவொரு நாடுகளுக்கும் எமது பகுதிகளை விற்கவில்லை. எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவுமில்லை. இயற்கையான பகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு நாம் சில பகுதிகளை வழங்குகின்றோம். இதனால் எமது மக்களுக்கும் நன்மைகள் ஏற்படும்.
வடக்கில் இந்தியாவும் சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வடபகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்’ என அவர் விளக்கமளித்துள்ளார்.
இவ்வாறு சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் நாடளாவிய ரீதியில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் காரணமாக இலங்கையில் சீனாவின் நகர்வுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது.
வடக்கில் மையங்கொண்ட சீனப்புயல் , இந்தியாவை நோக்கி நகருமா, தமிழர் தாயகத்தை புரட்டிப்போடுமா? சிங்களப் பேரினவாதிகளுக்கு தீனி போடுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
[embedded content]