தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக சமூகம் விழிப்படைய வேண்டிய தேவை இருக்கின்றது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கிராமியப் பாலங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூரில் 02 பாலங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், ஏறாவூரின் பிரதேச எல்லை விஸ்தரிக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது. ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் 32 கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் 31 வருடங்களாக விரட்டியடிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவ்வளவு காலங்களும் அவர்கள் அங்கு வசித்திருந்தால் அந்தக் கிராமங்கள் நகரங்களாக மாறியிருக்கும். அவ்வாறு எங்களுடைய உரிமைகளைப் பறித்து விட்டு எங்களை வாய்மூடி மௌனியாக இருக்கச் சொல்லுகின்ற விடயம் எவ்வாறு நியாயமாகும்.
ஒரு இனத்தின் உரிமையைக் கேட்பது இனவாதமல்ல அது கடமை. இன்னுமொரு இனத்திற்கு நியாயமாகக் கிடைக்கக் கூடிய உரிமைகளை மறுப்பதும் தடுப்பதுதான் இனவாதம். வடக்கிலே இருந்து எல்ரீரீஈ இனரால் முஸ்லிம் சமூகம் மாத்திரம் வெளியேற்றப்பட்டது இனவாதம்.
ஏறாவூரில் நடுநிசியில் உறக்கத்திலிருந்து முஸ்லிம்களை மாத்திரம் குறி வைத்து கொன்றொழித்தது இனவாதம். காத்தான்குடியிலே பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களைச் சுட்டு அழித்தது இனவாதம். முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே முஸ்லிம்கள் வாழ்ந்த 32 கிராமங்களை விட்டும் முஸ்லிம்களைத் துரத்தி அடித்து வெளியேற்றியது இனவாதம்.
அந்தக் கிராமங்களை இன்றுவரை கொடுக்காமல் இருப்பதும் இனவாதம். ஏறாவூர்பற்று பிரதேச செயலானர் பிரிவில் 1 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் சதுர கிலோமீற்றர் காணிகள் இருக்கத்தக்கதாக ஏறாவூர் முஸ்லிம்களை வெறும் 923 ஏக்கர் காணிகளுக்குள் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலகப் பிரிவுகளில் 26 சதவீதம் வாழ்கின்ற முஸ்லிம்கள் வெறும் 1.3 வீதக் காணிகளுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 2640 சதுர கிலோமீற்றர் காணிகளில் குறைந்த பட்சம் முஸ்லிம்களுக்கு 800 சதுர கிலோமீற்றராவது தரப்பட வேண்டும். இந்த விடயத்தில் சமூகம் விழிப்படைய வேண்டிய தேவை இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

மாகாணசபையின் அதிகாரத்தினை பறித்து பசிலிடம் வழங்கிய பிள்ளையான்! சாணக்கியன்