தமிழர் பகுதிகளில் கால்பதிக்கும் சீனா – இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழர் தாயகத்தில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எந்த திட்டங்களானாலும் தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு பெற்ற பின்னரே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீன வட்டத்தை விரிவாக்கும் ஆட்டத்துக்காகத் தமிழர் தாயகப் பகுதிகளை பலியிடவிடாது, தமிழர் தேசமும் தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையினை செலுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைத்தீவின் தமிழர் தாயகப்பகுதியின் வட புலத்தே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இயற்றும் மின்சக்தி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ள சீனா, இந்த முடிவுக்கு ‘மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு’ காரணமென கூறியுள்ளது.

சீனாவின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. எனினும் தமிழர் தாயகத்தின் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும்.

போருக்கு பின்னராக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயக பகுதிகளில் தொடங்கப்படும் திட்டங்கள் எதுவானாலும் அம்முயற்சிக்கு தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு பெற்ற பின்னரே தொடங்க வேண்டும். இசைவு என்பது திட்டங்களின் அரசியல், பொருளியல் கூறுகளுக்கு மட்டுமன்று, நம்பகமான பன்னாட்டு அமைப்பொன்றின் சூழலியல் மதிப்பாய்வின் ஊடாகச் சூழலியல் கூறுகளுக்கும் இசைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

சீன நிறுவனங்களுக்கு திட்டங்கள் வழங்குவதன் மூலம் இந்தியாவைச் சுற்றிவளைக்கவும் அடக்கி வைக்கவும் சீனாவுக்கு உதவும்இலங்கையின் நகர்வுகள் தமிழர் இறையாண்மை மீது நெடுந்தாக்கத்தினை ஏற்படுத்தும். வட புலத்தே யாழ். குடா நாட்டையும் இந்தியாவின் தமிழ்நாட்டையும் பிரிக்கும் குறுகலான பாக்கு நீரிணையில் அமைந்த சிறு தீவுகளான நெடுந்தீவு, அனலைத்தீவு, நைனாத்தீவு ஆகிய இடங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு சைனோ சர் ஹைப்ரிட் டெக்னாலஜி என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான சீனத் தூதரகம் ‘மூன்றாம் தரப்பு’ எதுவென்று கூறாவிட்டாலும் அது இந்தியாதான் என்று நம்பப்படுகிறது. அந்தச் சிறு தீவுகளில் இந்திய நிறுவனமான அதானி குழுவுக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள திட்டப் பணியை வழங்கும் ஒப்பந்தத்தை கடந்த பெப்ரவரியில் கொழும்பு நீக்கம் செய்து, அதனை சீன நிறுவனத்துக்கு வழங்கிய போது இந்தியா தனது பாதுகாப்பு சார்ந்த கவலைகளை தெரிவித்தது.

இந்திய நிறுவனத்தின் முயற்சியை சீனம் கீழறுத்த செயல் அந்த நேரத்தில் இலங்கையில் தன் நலன்களைக் காத்துக்கொள்வதோடு அண்டை நாடுகளோடு இந்தியாவுக்குள்ள உறவுகளைக் கெடுக்கவும் கிழக்காசிய நாடாகிய சீனத்துக்குள்ள வல்லமையாகக் கருதப்பட்டது.

இலங்கையின் வட கடலோரத்தில் யாழ். குடாநாடும் அதன் கடற்பகுதியில் அமைந்த சிறு தீவுகளும் தொன்றுதொட்டுத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன.

ஆகவே, அவை தமிழர் தாயகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். மேலும் இலங்கைத் தீவின் தமிழர் தாயகம் பகுதியும் அதையொட்டிய கடற்பிராந்தியம் தமிழர் இறைமைக்கு உட்பட்டவை. இதனை உறுதி செய்திடத் தமிழர் தேசமும் தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையினை செலுத்த வேண்டும்” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *