சீனாவை பகைமைச் சக்தியாக தமிழர்கள் பார்க்கக் கூடாது! சபா குகதாஸ்

இலங்கை அரசாங்கத்தின் நேச நாடுகளை தமிழர்கள் ஒரு போதும் பகைச் சக்திகளாக பார்க்கக் கூடாது அவ்வாறு நினைத்தால் நீண்டகால அடிப்படையில் தமிழர்களுக்கு மிகப் பலவீனமாக அமையும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சீனா தமிழர் தாயகப் பகுதியில் வருகை தருவதன் இராஐதந்திரத்தை சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை ஆய்வு செய்யாமல் எய்தவன் இருக்க அம்பை நோகும் நிலையில் சில தமிழ் அரசியல் வாதிகள் சீனாவுக்கு நிலங்களை குத்தகைக்கு கொடுக்க தயாராகும் இலங்கை அரசாங்கத்தை கேள்வி கேட்பதை விட்டு சீனாவைப் பார்த்து நீங்கள் தமிழர் தாயகத்திற்குள் வர வேண்டாம் , தமிழர்களுக்கு என்ன தீர்வு தருவீர்கள் என்ற சிறு பிள்ளைத் தனமான கேள்விகளை கேட்பது தமிழர்களின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு ஆரோக்கியமாக இல்லை.

சீனா தமிழர்களுக்கு என்ன தீர்வு தருவார்கள் என்று கேட்பதற்கு முன் தமிழர் தரப்பு என்ன கோரிக்கையை சீனாவிடம் முன் வைத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் என்ன?

சீனாவின் மனிதவுரிமை விவகாரங்கள் கேள்விக்குரியதாக இருப்பது உண்மை ஆனால் இன்று உலகில் சீனாவின் பகை சக்தியாக பேசப்படும் இந்தியா , அமெரிக்கா போன்ற நாடுகள் பெருமளவு வர்த்தக உறவுகளை சீனாவுடன் பேணிக் கொண்டுதானே உள்ளன.

அத்துடன் அண்மையில் அமெரிக்காவிற்கே டொலர் பிர்ச்சினை ஏற்பட்டுள்ளாதாம் அதனை நிவர்த்தி செய்ய சீனாவிடமே டொலரினைக் கடனாக பெற அமெரிக்கா தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

காரணம் இன்று உலகில் அதி கூடிய டொலர் கையிருப்பு சீனாவிடம் தான் உள்ளது அவர்களிடம் 4.5 ட்ரில்லியன் உள்ளதாம்.

சீனாவை பகைமைச் சக்தியாக வெளிப்படையாக விமர்சித்தல் தமிழர்களுக்கு இராஐதந்திர பின்னடைவாகவே அமையும்.

குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் மிக நெருங்கிய சுப்பப் பவர் நாடுகளை தமிழர் தரப்பும் நெருங்கி உறவாடும் தந்திரத்தை கொண்டிருக்க வேண்டும்.

அதுவே இலங்கை அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான வெளிநாடுகளின் ஆதரவுத் தளத்தை பலவீனப்படுத்தும்.

இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு ஒரு வர்த்தக நகரத்தை தனது இறைமைக்கு அப்பால் வழங்கியுள்ளது.

மேலும் பல இடங்களை 99 வருட குத்தகைக்கு வழங்கியுள்ளது சீனாவிடம் பெற்ற கடன்கள் மீளக் கொடுக்க குறைந்தது இருபது தலைவர்களின் ஆட்சிக்காலம் எடுக்கும்.

அதாவது நூறு வருடங்கள் தேவை அவ்வாறாயின் சீனாவுடன் எந்த ஆட்சியாளர் வந்தாலும் இணைந்து பயணிக்க வேண்டும் இதன் பின்னணியில் சீனாவை தமிழர் தரப்பு பகைமைச் சக்தியாக பார்ப்பது ஈழத் தமிழர்களின் அரசியல் இருப்பிற்கு ஆரோக்கியமாதாக இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *