சீனா தடுப்பூசி அனுப்பும் போது எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் மீனவருக்கு உதவியை வழங்கும்போது எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்?
சீனா தடுப்பூசி அனுப்பும் போது எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் இன்று மீனவருக்கு நாம் உதவியைப் பெறும் போது எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்க சமாசனங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் வர்ணகுலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சீனோபார்ம் ஊசியை தான் எல்லோரும் போட்டிருக்கின்றோம். அதனை வடமாகாணத்திற்கு வராமல் தடுக்க ஏன் யாரும் குரல் கொடுக்க வரவில்லை? அவர்களிடமிருந்து உதவி பெறும் போது யாரும் கேள்வி கேட்கவில்லை.
எமது கரையோரங்களையும், கரையோர மக்கள் படும் கஸ்டங்களையும் எந்த அரசியல்வாதிகளும் பார்க்கவில்லை.
எந்த நாடு உதவிகளைத் தந்தாலும் அதனை வேண்டி மக்களுக்கு கொடுப்பதற்கு நாங்கள் தயாராகத் தான் இருக்கின்றோம்.
மேலும், நேற்றைய தினம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்த இந்திய இழுவை படகுகள் தொடர்பாக இந்திய மீனவர்கள் கூறும் போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்தனர் என்றார்கள். இது முற்றிலும் பொய்யானது.
ஏனெனில், கைது செய்யும்போது கரையில் நின்ற சில பொதுமக்கள் அதனைப் பார்வையிட்டனர்.
இவ்வாறான அத்துமீறலுக்கான கைதுகள் தொடர வேண்டும். இக் கைது நடடிக்கை மேற்கொண்டமைக்கு முப்படைத் தளபதி, கடற்றொழில் அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கு நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும், தங்கூசி வலைகளை பாவித்து மீன் பிடிப்பதற்கு தடை விதிக்குமாறும், அவ்வாறு மீன் பிடிப்பவர்களை கைது செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.