
மின்சார சபையின் சுன்னாகம் மின் நிலையத்தில் இருந்த பழைய இரும்புகளை எடுத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
காங்கேசன்துறை இராணுவ முகாமை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் தர சிப்பாயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மின்நிலையத்தில் இருந்த பழைய இரும்புகள் காணாமல் போயிருந்தமை தொடர்பில் மின்சார சபை அதிகாரிகள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். விசாரணைகளை மேற்கொண்டிருந்த சுன்னாகம் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாயை நேற்றுக் கைது செய்தனர்.
சுன்னாகம் மின்சார நிலையத்துக்கு இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அவ்வாறு கடமையில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சிப்பாய் மின்சார நிலையத்தில் இருந்த பழைய இரும்புகளை, வீதியால் செல்லும் இரும்பு வியாபாரிக்கு விற்றுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபரைப் பொலிஸார் மல்லாகம் நீதிவான் ஆனந்தராஜாவிடம் முற்படுத்தியபோது, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.