வியட்நாமில் உயிர்மாய்த்த இலங்கையரின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது!

வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வைத்தியசாலையில் உறவினர்கள் கூடியுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடி கப்பல் சேதமடைந்து, தத்தளித்துக்கொண்டிருந்துள்ளது.

அதனையடுத்து அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர். அங்கு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.  

அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயற்சித்திருந்தனர்.

அதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீண்டநாட்களிக் பின்னர் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *