நாட்டின் கிழக்கு கடற்பரப்பிலுள்ள கனிம வளங்களை அபகரிக்கும் முயற்சி தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் கிழக்கு கடல் எல்லையை அண்டிய இரு கப்பல்கள் பங்களாதேஷ் நோக்கி பயணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இரு கப்பல்களின் வருகையின் நோக்கம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், அரசாங்கத்தின் தலையீடு குறித்த சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.
பொருளாதார ரீதியில் அரசாங்கம் திருப்திகரமான பதில்களையோ அல்லது எதிர்காலத்திற்கான தெளிவான பார்வையையோ வழங்கத் தவறியுள்ள அதேவேளை, நாட்டில் பெரும் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிவாயு கசிவு வெடிப்பு சம்பவங்களால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அரசாங்கத்திற்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.