தமிழக மீனவர்களை கைது செய்தது கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிரானது! மதுரை நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், 10 படகுகளையும் விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மோர் பண்ணையைச் சேர்ந்தவர் ஜி.திரு. முருகன் என்ற தீரன திருமுருகன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ள இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 68 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தது 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிரானது.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் உடல் முழுவதும் கிருமிநாசினி தெளித்து அவமதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, இலங்கைக் கடற்படை, கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 10 படகு ளையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று நடைபெறும் விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *