உடப்பில் தீவிரமடையும் கடலரிப்பை தடுக்க விரைவில் நடவடிக்கை

புத்தளம் – உடப்பில் தீவிரமடையும் கடலரிப்பை கட்டுப்படுத்த விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பிதேச சபையின் தவிசாளர் தட்சணாமூர்த்தி இன்று தெரிவித்தார்.

உடப்பில் தீவிரமடையும் கடலரிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில்கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், உடப்பு பிரதேசத்தில் மீனவர்களுக்கான இறங்குதுறை ஒன்றையும் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் ஒன்றான உடப்பு பகுதியில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக, இங்குள்ள மீனவர்களும், மக்களும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறு கடலரிப்பின் உக்கிரம் காரணமாக பல மீன் வாடிகளும், வீடுகளும் சேதமடைந்து காணப்படுகின்றன.

இதுதொடர்பில் அண்மையில் இந்த பகுதிக்கு விஜயம் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் இதுபற்றி தெரியப்படுத்தி, கடலரிப்பின் உக்கிரத்தை நேரில் காண்பித்து இதனால் ஏற்படப் போகும் பாதிப்பு பற்றியும் விளக்கப்படுத்தினோம்.

இதுகுறித்து விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளித்துச் சென்றார்.

அத்துடன், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சந்தித்து, கடலரிப்பு மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கி வரும் இறங்குதுறை உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வந்தோம்.

எனினும், விரைவில் உடப்பு பகுதிக்கு விஜயம் செய்து, கடலரிப்பு பிரச்சினை மற்றும் இறங்குதுறை அமைப்பது தொடர்பில் கவனம் தெலுத்துவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எம்மிடம் தெரிவித்தார்.

எனவே, உடப்பு கடலரிப்புக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதுடன், இந்தப் பகுதியில் பாரிய இறங்குதுறை ஒன்றையும் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆராச்சிக்கட்டுவ பிதேச சபையின் தவிசாளர் தட்சணாமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *