யாழ். வேலணையில் ‘சைவத்தின் காவலர் நாவலர்’ சிறப்புச் சொற்பொழிவு

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் ‘ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் ஆண்டு’ எனப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிலே, நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘வாராந்தச் சொற்பொழிவும், மாதாந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ என்னுந் தொனிப்பொருளில், இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வுகள், கனடா ரொறன்ரோ என்னும் இடத்தினை வதிவிடமாகக் கொண்ட சிவஸ்ரீ பாலசுப்பிரமணியக்குருக்கள் திருகுணானந்தக்குருக்கள் அனுசரணையுடன், சமயஜோதி திரு.கதிர்காமன் நிஜலிங்கம் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இச் செயற்றிட்டத்தில், ஆரம்ப நிகழ்வாக சிறப்புச்சொற்பொழிவு யாழ்ப்பாணம் வேலணை சர்வசக்தி அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் எதிர்வரும் 07.01.2022 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்து கலாசார உத்தியோகத்தர் த.விஜிதா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், சைவப்புலவர் சைவசித்தாந்தபண்டிதர் செ.த.குமரன் ‘சைவத்தின் காவலர் நாவலர்’ என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார். நன்றியுரையினை அறநெறிப் பாடசாலை ஆசிரியர் செல்வி பொ.யமுனாதேவி ஆற்றுவார்.

சொற்பொழிவில் மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பரிசில்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *