
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அபயராம விகாரைக்கு சென்று தேரரைச் சந்தித்துவிட்டு வெளியேறிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் இராஜினாமா செய்ததாக நாட்டில் பரவி வருகிறது.
அப்படி ஒன்று இருக்கிறதா என்று பிரதமரிடம் கேட்டேன். அது குறித்து அவருக்குத் தெரியாது. இராஜினாமா செய்வதில் தனக்கு எண்ணம் இல்லை என்றும் பதவி விலக வேண்டிய தேவை மற்றும் அவசியமில்லை என்றும் பிரதமர் கூறினார்.
அப்படியானால், பிரதமரைப் பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்ற உண்மையை நாம் கண்டறிய வேண்டும். யார் அழுத்தம் கொடுத்தாலும் அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார். அவர் பதவி விலகினால், எம்மிடம் கூறிய பின்னரே விலகுவார்.
பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கும் நபர்கள் இருப்பார்கள் என்றால், ஒழிந்து மறைத்துச் செயற்படாது, பதவி வகித்தது போதும் விலகி விடுங்கள் என நேரடியாகக் கூறுங்கள்.
எனினும் நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை பதவியிலிருந்து விலகவிட மாட்டார்கள். அவர் விலகவும் மாட்டார்” என்றும் ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.