சுதந்திரதின அணிவகுப்பில் 6,783 படையினர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு!

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட அனைத்து நாடுகளின் இராஜதந்திரிகள் இம்முறை சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதுடன் அவர்களுக்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவையொட்டி சமய வழிபாடுகள் அன்றைய தினம் காலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளன.

பௌத்த மத நிகழ்வு நாரஹேன்பிட்டியிலுள்ள அபேயராம விஹாரையில் நடைபெறவுள்ளதுடன் முக்கிய அமைச்சர்கள் பலரும் அதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்து சமய மத நிகழ்வுகள் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முஸ்லிம் சமய மத வழிபாடுகள் கொழும்பு 12 பெரிய பள்ளியில் நடைபெறவுள்ளதுடன் நீதியமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கத்தோலிக்க சமய மத வழிபாடு புஞ்சிபொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அநுரத்த, திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கிறிஸ்தவ வழிபாட்டு நிகழ்வு கொழும்பு 02 இல் உள்ள இரட்சணிய சேனை ஆலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நடைபெறவுள்ளன. நிகழ்வு நடைபெறும் சுதந்திர சதுக்கத்தையொட்டிய பிரதேசங்கள் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படுவதுடன் நிகழ்வில் பங்குபற்றுவோருக்கான பொது வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர தின நிகழ்வுகளின் முக்கிய அம்சமான முப் படைவீரர்களின் அணிவகுப்பில் இம்முறை 6,783 வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன் ஒத்திகை நேரம் தவிர்ந்த ஏனைய காலங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் வீதிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் தேசிய கீதம் இசைப்பதற்காக 45 பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

விசேட அதிதிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்காக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 7.30 மணிக்கு முன்பதாக அனைவரும் ஆசனத்தில் அமரவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்முறை சுதந்தர தின நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் கடந்த வருடங்களைப் போன்று வீதியில் இரு மருங்குகளிலும் இருந்து நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *