
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்ற குழு உரிய நேரத்தில் அதே மேடையில் ஒன்றிணையும் என்று தான் நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று ஒட்டுமொத்த மக்களும் அரசியல்வாதிகளை நிராகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கின்றனர். அரசியலை வெறுத்து ஒதுக்கும் நிலைமைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கம், முந்தைய அரசாங்கத்தில் அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டுவந்து மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் ஓரளவு நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால் அப்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, முன்னாள் திருடர்கள் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து இனவாதத்தை மக்கள் தலையில் விதைத்து ஆட்சியை கைப்பற்றினர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவ்வாறான திருடர்களை கைதுசெய்து நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு செல்வார் என்று நினைத்து 69 இலட்சம் மக்களும் அவருக்கு வாக்களித்தனர்.
எனினும், தற்போது என்ன நடந்துள்ளது? ஜனாதிபதியால் இன்று முறையாக செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம், அரசமைப்பின் 20ஆவது சீர்திருத்தத்தை கொண்டுவந்ததுடன், நாடாளுமன்றத்தில் மூன்று இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு எதனையும் செய்ய முடியாதுள்ளது.
நாட்டு மக்கள் இன்று பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். பொருளாதாரத்தை நிர்வகிக்கும் திறன் இந்த அரசாங்கத்துக்கு இல்லை.
இந்த பொருளாதார பிரச்சினைக்கு டொலர் இன்மையே காரணம். டொலர் பற்றாக்குறை காரணமாக மற்ற நாடுகளுடன் வியாபாரம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது – என்றார்.