
பல்பொருள் அங்காடியொன்றில் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை விரட்டி பிடிக்க முயன்ற போது அவர் நடு வீதியில் கழுதை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹபாகே வீதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயே இன்று காலை 10.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் பல்பொருள் அங்காடியில் குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவிய போத்தல்களை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் வெளியேர முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட அருகில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட போது, கையில் வைத்திருந்த கத்தியால் முச்சக்கர வண்டி சாரதியைக் குத்திவிட்டு குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
அங்கிருந்த மற்றும் பலர் குறித்த சந்தேக நபரை பல்பொருள் அங்காடியிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் விரட்டி பிடித்துள்ளனர்.
இதன்போது, யாரும் நெருங்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாகவும் குறித்த நபர் மிரட்டியுள்ளார்.
பின்னர் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சந்தேக நபரை மீட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், அதன்போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சந்தேக நபரின் சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நாகொல்ல, உக்குவெலவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் காயமடைந்த ராகம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதான முச்சக்கர வண்டியின் சாரதி ராகம வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.