
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்சவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இளம் வீரராக நாட்டுக்காக விளையாடுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளதால், அவசர முடிவுகளை எடுப்பதை விட சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்வதே முக்கியம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் விளையாட்டு மற்றும் விளையாட்டின் வாழ்க்கை சவாலானது.” எனவும் அவர் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பானுக ராஜபக்ச இலங்கை கிரிக்கெட் சபைக்குக் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
தனது குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த முடிவினை எடுத்துள்ளதாக பானுக ராஜபக்ச குறித்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
30 வயதான பானுக 5 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும், 18 T-20 போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.
இவரின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சமூக மற்றும் பிற ஊடகங்களில் நேர்காணல்களில் கலந்துகொண்டதன் மூலம் இலங்கை கிரிகெட் அணியின் வீரர்களுக்கான ஒப்பந்தத்த கடப்பாடுகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் சகல விதமான போட்டிகளிலுமிருந்து இவருக்கு, 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருடத் தடையை கிரிக்கெட் சபை கடந்த ஆண்டு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.