
மீனவர்களுக்கு மண்ணெண்ணை மற்றும் ஒயில் ஆகியவற்றுக்கு மானியம் வழங்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மீனவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தினேஷ் சுரஞ்சன் பர்னாந்து தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை கற்பிட்டியில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா தொற்றுப் பரவல், கடும் மழையுடனான வெள்ளம் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் எண்ணெய்க் கசிவு என்பனவற்றின் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மீனவர்கள் ஒரு நாளைக்கு தமது தொழில் தேவைகளுக்காக சுமார் நூறு முதல் 120 லீட்டர் மண்ணெண்ணெய் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தீடீர் எரிபொருள் விலையேற்றம் எமது மீனவர்களுக்கு பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் கடன்களைப் பெற்று மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் தமது தொழிலை செய்து வருகின்றனர்.
எனினும், இந்த மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்கள் மற்றும் மீனவ ஏற்றுமதியாளர்கள் என மீனவத் தொழிலில் ஈடுபடுகின்ற அனைவரும் மேலும் கடனாளிகளாக மாறும் நிலை காணப்படுகின்ன.
அதுமாத்திரமன்றி மீன்பிடி உபகரணங்களும் கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாமல் என்றுமில்லாதவாறு பாரிய அளவில் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, மண்ணெண்ணெய், ஒயில் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பனவற்றின் விலைகள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்
அத்துடன், மீனவர்களுக்கு எரிபொருள் மற்றும் உபகரணங்கள் என்பனவற்றுக்கு மானியங்களையும், விஷேட சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அவசரமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.