
இலங்கையில் பல்வேறு அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவற்றை சீர்செய்து நாட்டின் நிர்வாகத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து வெறுப்புணர்வைப் பரப்புவதன் மூலம் பேரினவாதத்தை ஊக்குவிப்பதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனத்தைக் குவித்திருக்கின்றது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாத ஒரு அச்ச நிலை ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டவர்கள் ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இவ்வாறு உள்ளக – வெளியக ரீதியாக கோட்டாபய அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுக்களையே இன்றைய ஆய்வில் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
நாட்டின் தேசிய ஆங்கிலப் பத்திரிகையொன்றில் ‘அரிசிக்கான தட்டுப்பாட்டினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த ஆசிரியர் தலையங்கத்தை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கக்கூடிய பதிவில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில், அவற்றுக்குத் தீர்வை வழங்கக்கூடிய வகையிலான சிறந்த தீர்மானங்கள் எவையும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை. பல வாரங்களாக நீடிக்கும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு வெகுவிரையில் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.
இதில் தலையீடுசெய்து பிரச்சினைக்குத் தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் வெகுவிரையில் பொதுமக்களின் வீடுகளில் சமைப்பதற்கு அவசியமான பொருட்கள் இல்லாமல்போகக்கூடும் என்பதால், சமையல் எரிவாயுவிற்கான தேவையும் இல்லாமல்போகலாம். குறிப்பாக அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன் அவற்றின் விலைகள் அநேகமான மக்களால் கொள்வனவு செய்யமுடியாத அளவிற்கு உயர்வடைந்துள்ளன.
தற்போது மதுபானம் மற்றும் சிகரெட் மாத்திரமே தட்டுப்பாடின்றிக் கிடைக்கின்றன. உரப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லமுடியாத நிலையிலிருக்கின்றனர்.
அதன் விளைவாக அரிசி உள்ளடங்கலாக நாட்டின் தேசிய உற்பத்தி வீழ்ச்சி கண்டிருக்கிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் சீரான நிர்வாகத்திலும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இன மற்றும் மத ரீதியாக சிறுபான்மை மக்களை இலக்குவைத்து வெறுப்புணர்வைப் பரப்புவதன் ஊடாக பேரினவாதத்தை ஊக்குவிப்பதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனத்தைக் குவித்திருக்கின்றது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகாலத்தில் இலங்கையில் அரசியல் முட்டி மோதல்களுக்கு அப்பால் பெரிதும் பேசப்படுகின்ற விடயம் பொருளாதார நெருக்கடிகளாகும்.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிகுண்டுகளாக ஒவ்வொரு வீடுகளிலும் மாறியுள்ளது. எரிபொருட்களின் விலை ஒரே இரவில் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதையும், இயற்கை உரத்தினை பயன்படுத்துவதையும் அரசாங்கம் தேசிய கொள்கையாக கொண்டிருக்கின்றபோதும், அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது.
சீனாவிடமிருந்து உரத்தினை பெற்றுக்கொள்வதற்கு முயன்று, இறுதியில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறியிருக்கின்றது. அதேநேரம், பொருட்களின் விலையேற்றம்இ, மரக்கறிகளின் விலையேற்றம் என்று மக்கள் அன்றாட வாழ்வில் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.
இந்த நெருக்கடிகளை போக்கும் வல்லமை அரசாங்கத்திடம் இல்லலை. திறைசேரியில் இருப்பில்லை. நாட்டிற்கு உரிய வருமானம் இல்லை. குறிப்பாக சுற்றுலாத்துறை முழுமையாக முடங்கிக் கிடக்கின்றது. ஆடையேற்றுமதியும் சொல்லும்படியாக இல்லை.
இத்தகையதொரு நிலையில், இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பில் அரசாங்கம் இன்றும் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷக்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் விளைவினை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தேன். நான் குறிப்பிட்டதை மக்கள் ஏற்கவில்லை தற்போது அனுபவ ரீதியில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷக்களுக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தொடர்பில் கருத்துரைப்பது பயனற்றதாகும். ஜனாதிபதியால் நாட்டையல்ல ஒரு பிரதேச சபையைக் கூட சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய வகையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஊடாக பாராளுமன்றிற்கு வழங்கினார். பின்னர் அவர் தலைமையிலான சுதந்திர கட்சியினர் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஊடாக பாராளுமன்றின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் ஜனாதிபதிக்கு வழங்கினார்கள். நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என்று பரவலாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
இதுவொருபுறமிருக்க ஒரு சில அரசியல் தலைமைகள் தாங்கள் ஆட்சிப் பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து வந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார்.அத்தோடு, இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கைக்கு என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாத ஒரு அச்ச நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலை மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நாட்டின் நலனுக்காகத்தான் நாங்கள் எல்லோரும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால், ஒரு சில அரசியல் தலைமைகள் இனவாதத்தையும், மதவாதத்தையும் கக்கி இனவாத, மதவாத சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்தி, தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து வந்துள்ளதை நாங்கள் பார்க்கின்றோம்.
இனவாதத்தையும், மதவாதத்தையும் மூலதனமாகக் கொண்ட அரசாங்கம் தான் இந்த இரண்டு வருட காலத்துக்குள் இவ்வாறான மோசமான நிலைக்கு இந்த நாட்டை கொண்டு சென்றுள்ளது என்பது எம் எல்லோருக்கும் தெரியும்.
இன்று விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடுகின்றார்கள். தங்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க விடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள்.
தமது விவசாயத்திற்குத் தேவையான பசளையை தாருங்கள் என்று வீதியில் போராடுகின்ற ஒரு மோசமான நிலை இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கின்றனர்.
ஒரு நாள் வேலையை விட்டு விட்டு ஹாஸினை பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதோடு, நினைக்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
நானும் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனனும் ஒரே அமைச்சில் அமைச்சர்களாக இருந்தோம். அவர் இராஜாங்க அமைச்சராக இருந்தார்.
எங்களிடம் தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஹாஸ் நிறுவனத்தினர் வந்து 250 ரூபாய் கூட்டித்தாருங்கள் என்று கேட்டார்கள்.
கடைசியாக 100 ரூபாய் கூட்டித்தாருங்கள் என்று கேட்டனர். நாங்கள் கூறினோம் ஒரு ரூபாய் கூட கூட்டித்தர முடியாது என்று.
மாவின் விலையைக் கூட்டுவதற்கு இலங்கையிலுள்ள இரண்டு கம்பனியினர் எங்களிடம் வந்து கேட்டார்கள். 6 ரூபாய் கூட்டுவதற்கு கேட்டார்கள். அதற்கு நான் இருக்கும் வரை ஒரு ரூபாய் கூட கூட்ட அனுமதிக்க மாட்டேன் என்று கூறினேன்.
அதேபோன்று தான் 100 ரூபாய்க்கு சீனியையும், அரிசியை 70 ரூபாய் வரைக்கும், பருப்பு 120 ரூபாவிற்கு விற்றோம். இவ்வாறு ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டோம். பொருட்களின் விலையை இந்த நாட்டில் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தோம்.
ஆனால், இன்று இனவாதத்தையும், மதவாதத்தையும் மூலதனமாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் பொருட்களின் விலையை அரசாங்கம் அல்ல, அமைச்சர்கள் அல்ல பொருட்களின் விலையை கடை முதலாளிகள், வியாபாரிகள் தீர்மானிக்கின்ற நிலைக்கு நாடு மோசமடைந்துள்ளது.
எனவே, எம்மிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதம் பிரார்த்தனை. இந்தப் பிரார்த்தனை ஊடாக இந்த நாட்டிற்கு நல்லதொரு ஆட்சிக்காக எல்லா இனத்தையும் சமமாக மதிக்கின்ற நல்லாட்சிக்காக, எல்லா இனமும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஆட்சிக்காகவும், நமது பொருளாதாரம் மேம்பட்டு, நமது பிள்ளைகள் நாளை ஏழைகளாக மாறிவிடாது, பசியிலும், பஞ்சத்திலும் வாழ்ந்திடாமல் நிம்மதியாக வாழ்ந்திட நல்லதொரு ஆட்சிக்காக நாம் எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புறம் மக்களைக் காப்பாற்ற இறைவனைப் பிரார்த்திக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, மறுபுறம் கொலைக் குற்றவாளிகளை இறைவன் நிச்சயம் தண்டிப்பான் என்று ஆட்சியாளர்களை நோக்கி சாபம் போடப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லசந்த விக்கிரமதுங்கவின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டிலே ஜனாதிபதியாக இருக்கும் கோட்டாபய தான் அன்று பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர். அவர் 2009 ஆம் ஆண்டு லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்டதன் பிறகு கொடுத்த போட்டி ஒன்றைப் பார்த்திருந்தேன். அப்போது யார் இந்த லசந்த என்று கேட்டிருந்தார்.
எனக்கும் அவருக்கும் எதுவித பிரச்சினையும் இல்லை. ஆனால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்ய இருக்கின்றேன் என்றவர் தான் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்காக வழக்கு பேசிய அலி சப்ரி தான் இந்த நாட்டிலே நீதி அமைச்சராக இருக்கின்றார்.
லசந்த மட்டுமல்ல 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதேவேளை பொலிஸாரால் லசந்த கொலை தொடர்பாக வழக்குத் தொடரவில்லை.
எனவே, இனிவரும் காலங்களிலாவது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். கொலைக் குற்றவாளிகளுக்கு அரசாங்கத்தாலோ, நீதிமன்றத்தாலோ தண்டனை வழங்கப்படாவிட்டாலும் இறைவன் நிச்சயம் தண்டனை வழங்குவான். கொலைக் குற்றவாளிகள் ஒரு போதும் நிம்மதியாக வாழ முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தாலும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கையுடன் நல்ல செய்திக்காக காத்திருப்போம்.
[embedded content]