
கோதுமைமா விநியோகம் வழமைக்கு திரும்பாவிட்டால் எதிர்காலத்தில் பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக பொருள்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பகச் சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை தற்போது வெதுப்பகப் பொருள்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், வழமையை விட குறைவான உற்பத்திகளையே மேற்கொண்டு வருவதாகவும் அந்தச் சங்கங்கள் குறிப்பிடுகின்றன.
யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் இது தொடர்பில் குறிப்பிடுகையில், கோதுமைமா முன்னர் விநியோக்கப்பட்ட அளவை விட குறைவான அளவிலேயே பேக்கரிகளுக்கு வழங்கப்படுகின்றன. சுமார் 75 சதவீதமே வழங்கப்படுகின்றன. இதனால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருள்களை ஏற்கனவே குறைத்துள்ளோம், என்றார்.
இதேவேளை யாழ். மாவட்ட கூட்டுறவு வெதுப்பக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கந்தசாமி குணரட்ணம் தெரிவிக்கையில், உற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் காலத்தில் பாண் தவிர ஏனைய பேக்கரி பொருள்களை உற்பத்தி செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்படும்.
இலங்கை முழுவதும் 7 ஆயிரத்து 500 வெதுப்பகங்கள் உள்ளன. அவற்றில் 3 ஆயிரம் வெதுப்பகங்கள் மட்டுமே தற்பொழுது இயங்கிக் கொண்டுள்ளன. அவற்றிலும் ஆயிரத்து 500 பெரிய வெதுப்பகங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் பிரபலமான வெதுப்பகங்களுக்கு கோதுமை மா இல்லை. அவர்கள் தனியாரை நாடிய காரணத்தால் அவர்களுக்கு சங்கம் மூலம் கோதுமைமா விநியோகம் இடம்பெறுவதில்லை. வெதுப்பக உரிமையாளர்களின் தேவையை பிறிமா நிறுவனத்தால் தற்போது பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
யாழ். மாவட்டத்தில் அதிகமான பாடசாலைகளுக்கு சிற்றுண்டிகளை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது-என்றார்.