தேவைக்கு அதிகமாக மருந்துகளை வீடுகளில் பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், மருந்துகளுக்கு தட்டுப்பாட்டு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சிலர் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்துள்ளனர்.
இதன் காரணமாக செயற்கையான மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, வெவ்வேறு வெப்பநிலை நிலைகளில் சேமித்து வைக்க வேண்டிய மருந்துகளை வீடுகளில் நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதால் அவற்றின் தரம் கெடுவதோடு, உட்கொள்பவர்களுக்கும் பிரச்சினைகள் எழலாம், எனவும் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா மற்றும் இந்தியாவில் இருந்து கடன் வசதியின் கீழ் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதால், மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பிரச்சினை இல்லை.
வதந்திகளால் நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும், போதியளவு மருந்துகள் நாட்டில் இருப்பதால் மக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.