
பூஸ்டர் தடுப்பூசிகள் உட்பட நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்குத் தேவையான கொவிட் தடுப்பூசிகளை இலங்கை முழுமையாக பெற்றுள்ளது என அரச மருந்தாக்கக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் விசேட பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த மாபெரும் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்.
2021 ஜனவரி 18 அன்று அனைத்து கொவிட் தடுப்பூசிகளையும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான பொறுப்பை அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனதிடம் ஜனாதிபதி ஒப்படைத்தார்.
அதன்படி, அரச மருந்தாக்கக்கூட்டுத்தாபனத்தினால், 2.8 மில்லியன் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி டோஸ்களும், 1.5 மில்லியன் மாடர்னா டோஸ்கள், 195,000 ஸ்புட்னிக் வி டோஸ்களும், 26 மில்லியன் சினோபார்ம் மற்றும் 18 மில்லியன் ஃபைசர் டோஸ்களும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசர் தடுப்பூசிகளுக்கான மொத்தச் செலவையும் உலக வங்கியின் கடன் மூலம் செலுத்தியதாகவும், சினோபார்ம் தடுப்பூசியின் முழுச் செலவையும் ஆசிய வளர்ச்சி வங்கி ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.