
திருகோணமலை மட்டக்களப்பு வீதியில் உள்ள தோப்பூர் பட்டித்திடல் பகுதியில் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 26 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தினையடுத்து திருகோணமலை – மட்டக்களப்பு வீதியுடனான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைபட்டிருந்தது.
டிப்பர் வாகன சாரதி படுகாயங்களுடன் வாகனத்தில் சிக்குண்டு தவித்ததையடுத்து சுமார் அரை மணி நேரம் பொதுமக்கள் போராடி டிப்பர் வாகனச் சாரதியை டிப்பரிலிருந்து இழுத்தெடுத்து மீட்டமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.