
தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வாழ்ந்து, குத்துச்சண்டையில் சாதித்து, பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றவுள்ள, முல்லைத்தீவு யுவதிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்ப்பாட்டில் நிதி அன்பளிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகியுள்ளார்.
இவரது குடும்ப நிதி நிலைமைகள் ஒத்துழைக்காத நிலையில், போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்துடன் இருந்த யுவதி விடுத்த கோரிக்கையை ஈடுசெய்யும் முகமாக, வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் ஏற்பாட்டில் பல்வேறு அன்பர்களின் நிதி அன்பளிப்பு ஊடாக 1,05,000 நிதியுதவி இன்று மாலை வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் வைத்து குறித்த யுவதியிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவி பாகிஸ்தானில் வெற்றி பெற்று தங்க பதக்கம் கிடைத்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் எனவும், இந்த உதவியை வழங்கி வைத்த அத்தனை உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தெரிவித்துள்ளார்.
