வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பத்திற்கு வந்த உதவித் தொகையை சுருட்டிக் கொண்டு ஓடிய வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்!

அராலியில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு புலம்பெயர் நாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற உதவு தொகையின் ஒரு பகுதியை, அங்கஜனது கட்சியை சேர்ந்த வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் சுருட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

அராலியில் கணவரால் கைவிடப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு புலம்பெயர் நாட்டில் இருந்து ஒருதொகை பணம் அனுப்பப்பட்டது.

யூடியூப் இயக்குநர் ஒருவர் அந்த குடும்பத்தின் நிலையை காணொளி வடிவில் எடுத்து பகிர்ந்துள்ளார்.

அந்த காணொளியை பார்த்த புலம்பெயர் நாட்டில் வாசிக்கும் நல்லுள்ளம் கொண்ட ஒருவர் அந்த குடும்பத்திற்கு ஒரு தொகை பணத்தை அனுப்பியுள்ளார்.

புலம்பெயர் உறவுகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற அந்த பணத்தின் மூலம், குறித்த யூடியூப் இயக்குநர் அந்தக் குடும்பத்திற்கு தேவையான உதவித் திட்டத்தை வழங்குவதற்கு முயன்றார்.

இதன்போது, அந்த குடும்பத்தின் உறவினர் எனத் தெரிவிக்கப்படும் குறித்த பிரதேச சபை உறுப்பினர் அந்தப் பணத்தை பெற்றுக்கொண்டு அதில் ஒரு பகுதியை குறித்த குடும்பத்தின் உதவித்திட்டத்திற்கு வழங்கிவிட்டு மிகுதிப் பணத்திற்கு வேறு தேவை உள்ளது எனக்கூறி அபகரித்துச் சென்றுவிட்டார்.

அதனைத் தொடர்ந்து குறித்த யூடியூப் இயக்குநர், தன்னை அந்த குடும்பத்துடன் தொடர்புபடுத்திய நபரிடம் நடந்தவற்றை கூறினார்.

இதனை அறிந்த அந்நபர் பணத்தை சுருட்டிச் சென்ற பிரதேச சபை உறுப்பினருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி பணத்தினை அபகரித்து சென்றீர்களா என விசாரித்த வேளை அவர் அதனை மறுத்தார். பின்னர் ஒருகட்டத்தில் தான் பணத்தை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார்.

பின்னர் அந்த பணத்தையும் கொடுப்பதாக கூறினார். இருப்பினும் அந்த பிரதேச சபை உறுப்பினர் இதுவரை பணத்தை மீள வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பணத்தை அபகரித்து சென்றவர் பிரதேச சபை உறுப்பினர் மட்டுமன்றி சமாதான நீதிவான் பதவியில் உள்ளவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவருமான அங்கஜன் இராமநாதனது கட்சியியை சேர்ந்த ஒருவர் இவ்வாறு மக்களது பணத்தினை சூறையாடுவதை வன்மையாக கண்டிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *