
34 வருடங்களுக்கு முன்னர் நிராகரித்த 13ஆவது திருத்தச் சட்டத்தை இனப்படுகொலை நடந்த பின் கோருவது எந்த வகையில் நியாயம் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தம் என்பது 1987 ஆம் ஆண்டே அடியோடு நிராகரிக்கப்பட்ட ஒரு ஆவணம். 13 ஆவது திருத்தமும் மாகாணசபை சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குச் சமர்ப்பிக்கப்பட்ட போது இன்றைக்குக் கூட்டமைப்பின் தலைவர் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் ஆகிய மூன்று பேரும் இணைந்து இந்த 13 ஆவது திருத்த வரைபை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாது தடுத்து நிறுத்துங்கள் என ராஜீப் காந்திக்குக் கடிதம் எழுதினார்கள்.
அது ஒரு ஆரம்பப் புள்ளியாகக் கூட கருத முடியாது என்பதால் அப்போது நிறுத்தக் கோரினார்கள். அதனை ஆரம்பப் புள்ளியாகக் கருதலாம் என்றால் தடுத்து நிறுத்த முயன்று இருக்கத் தேவையில்லையே. 34 வருடங்களுக்கு முதல் நிராகரிக்கப்பட்டதை இன்று மீண்டும் கொண்டு வர முயல்கிறார்கள்.
அன்று ஏற்பட்டிருந்த இழப்புகளுடன் ஒப்பிடுகையில் அப்போது இழப்பு குறைவாக இருந்தது. இன்று இனவழிப்பு நடந்த பின் அதனை நடைமுறைப்படுத்தக் கோருவதில் என்ன நியாயம் இருக்கின்றது.
போர் முடிந்த கையுடன் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து 2009 மே மாதம் 21 ஆம் திகதி 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தீர்வாக ஏற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அதனையே இன்று நிறைவேற்ற முயலுகின்றார்கள்.
இது நடக்கும் என்று தெரிந்தமையால் நாம் கூட்டமைப்பிலிருந்து விலகி மக்களுக்கு இதனைத் தெரியப்படுத்தி வந்தோம். 11 வருடங்களாகச் சுட்டிக்காட்டி வந்த விடயம் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் தான் நாம் இதனை எதிர்க்கிறோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 11 வருடமாகச் செய்து வந்த அடிப்படையே 13 ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்பதுவே. அதனால் இதனை எப்படி நாம் தமிழர் நலன்சார்ந்து எதிர்க்காமல் இருக்க முடியும்.
ஒற்றையாட்சியின் சின்னமாக இருக்கக் கூடிய சிங்கக் கொடி, ஒற்றையாட்சியின் சின்னமாக இருக்கக் கூடிய இலங்கையின் சுதந்திர தினம் எல்லாவற்றையும் புறக்கணித்து வந்த தமிழ்த் தேசிய அரசியல் மாற்றியமைக்க முயல்கிறார்கள். ஒற்றையாட்சிக்குள் மக்களை முடக்குவதற்கு அவர்களை தயார்ப்படுத்தும் வேலைகள் நடைபெறுகின்றன.
இதனை நாம் எதிர்க்காதுவிடின் எதனை எதிர்க்க முடியும். எமது இருப்பே இதற்கு எதிரானது தான். யார் எதைச் சொன்னாலும் தமிழ் மக்களுக்கு உரிமை தெரிய வேண்டும். அதன் போது தான் இவை தோற்கடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.